B.Ed., மாணவர் சேர்க்கை தகுதிச் சான்றுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான தகுதிச் சான்று பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
            கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று, பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை (செப்.24) நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி. விசுவநாதன் கூறியது:
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் வழங்கப்படும் பி.எட். படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை பல்கலைக்கழகம் முதல்முறையாக நடத்தி வருகிறது.
வரும் திங்கள்கிழமை (செப்.29) மீதமுள்ள 120 பி.எட். இடங்களுக்கான இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ள தனியார் ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள், அவர்களிடம் உள்ள இடங்கள் அனைத்தையும் தாங்களாகவே நிரப்பிக் கொள்வது வழக்கத்தில் இருந்து வருகிறது.
இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் மாணவர் சேர்க்கை நடத்தும்போதும், கல்லூரிகள் அனைத்தும் பல்கலைக்கழகத்தில் தகுதிச் சான்று பெற வேண்டும். அவ்வாறு தகுதிச் சான்று பெற்ற பின்னரே, அந்தக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் சார்பில் பதிவு எண் வழங்கப்படும்.
அவ்வாறு 2014-15 கல்வியாண்டுக்கு தகுதிச் சான்று படிவத்தைப் பெறுவதற்கு செப்டம்பர் 17-ஆம் தேதி கடைசித் தேதியாகவும், பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 10 கடைசித் தேதி எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பல கல்லூரிகள், இந்த கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்தன.
அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு ஒப்புதலின் அடிப்படையில் தகுதிச் சான்று படிவத்தைப் பெறுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல், பூர்த்தி செய்த விண்ணப்பித்தைச் சமர்ப்பிக்க அக்டோபர் 20-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார்.