வங்கிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை?

 வங்கிகளுக்கு, ஆறு நாள் தொடர் விடுமுறை வருவதால், விழாக்கால வணிகம் மற்றும் மாத ஊதியம் பெறுவோருக்கு, பெரும் பாதிப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பல லட்சம் காசோலைகளை பணமாக்குவதில், பெரும் சிக்கல் ஏற்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் வணிகமும் முடங்கும் என, பொதுமக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

எத்தனை நாள் விடுமுறை:
வரும் 30ம் தேதி முதல், அக்., 5ம் தேதி வரை, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.
செப்., 30, அக்., 1ம் தேதி வங்கிகளின் அரையாண்டு கணக்குகளை முடிக்கும் பணி; பண பரிவர்த்தனை இருக்காது.
அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை.
அக்., 3ம் தேதி தசரா விடுமுறை.
அக்., 4ம் தேதி சனிக்கிழமை; வங்கிகள் அரை நாள் தான் இயங்கும்.
அக்., 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை.
அக்., 6ம் தேதி பக்ரீத் விடுமுறை.
இம்மாதம், 29ம் தேதிக்குப் பின், அக்., 7ம் தேதி தான், வங்கிகள் முழுமையாக இயங்கும். எனவே, வரும் 29ம் தேதி அன்றே, வங்கிப் பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளுமாறு, வணிகர்கள் உள்ளிட்டோரை எச்சரிக்கை செய்யும், குறுஞ்செய்திகள், நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன.

பிரச்னை என்ன?
நாடு முழுவதும், பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் என, 28 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் மூலம், தமிழகத்தில் மட்டும், நாள் ஒன்றுக்கு, 8 லட்சம் காசோலைகள் பணமாக்கப்படுகின்றன. இதுதவிர, ஏ.டி.எம்., மூலம், 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ், பணம் எடுப்பவர்கள் உள்ளனர்.வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருவதால், காசோலைகளை பணமாக்குவது முடங்கும். ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்க, அவற்றில், நாள்தோறும் பணம் நிரப்ப வேண்டும்.தொடர் விடுமுறை வந்தால், ஏ.டி.எம்., மூலம் பணம் எடுப்பதும் நின்றுவிடும்.ஒரு வார காலத்துக்கு, எந்தப் பண பரிவர்த்தனையும் நடக்காது. இதனால், வணிகம் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான பணம் இல்லாமல் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து, வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் கூறியதாவது:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுச் செயலர், விக்கரமராஜா:வரைவோலை (டி.டி.,) மூலமே, வாங்க வேண்டி பொருள்களை, வங்கி விடுமுறையால், வாங்க முடியாது. இதனால், செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர வாய்ப்புள்ளது.இணையதள வங்கி, மொபைல் வங்கி மூலம் பண பரிவர்த்தனை செய்யும் அளவுக்கு, வியாபாரிகளிடம் விழிப்புணர்வு இல்லை.மொத்தமுள்ள வியாபாரிகளில், 62 சதவீதம் பேர் தான், வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். இதில், 10 முதல் 12 சதவீதம் பேருக்குத் தான், இணையதள வங்கிப் பயன்பாடு தெரியும். மீதமுள்ளவர்களுக்கு, இதெல்லாம் தெரியாது. எனவே, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையேல், பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
சென்னை தொழில் மற்றும் வர்த்தக சபை பொதுச் செயலர், சரஸ்வதி:வங்கிகளுக்கு நேரடியாகச் சென்று, பண பரிவர்த்தனை செய்ய மட்டுமே, இங்குள்ள தொழில் மற்றும் வர்த்தகத் துறையினருக்குத் தெரியும். இவர்களால், இணையதள வங்கி முறையை முழுமையாக பயன்படுத்த முடியாது.இந்நிலையில், வங்கிகளுக்கு தொடர் விடுமுறை என்பது, தொழில் மற்றும் வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும். அதே நேரத்தில், பாரம்பரியமாக கொண்டாடும் விழாக்களை தவிர்க்க முடியாது.எனவே, கூடுதல் நேரங்களில், வங்கிகளை இயக்க வேண்டும்.வருமான வரி செலுத்த, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், வங்கிகளை இயக்குவது போல, தொடர் விடுமுறையால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க, கூடுதல் நேரங்களில் வங்கிகளைத் திறந்து வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
பெரும் பாதிப்பு இருக்காது வங்கி துறை விளக்கம்:
தொடர் விடுமுறை குறித்து, வங்கித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:தொடர் விடுமுறை என்பது, அதிகபட்சம், மூன்று நாள்களுக்குத் தான் இருக்கும். அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம் தேதி விடுமுறை என்றால், அக்., 1ம் தேதி வங்கி இயங்கும். அக்., 1ம் தேதி விடுமுறை என்றால், செப்., 30ம் தேதி வங்கி இயங்கும். இது, ஒவ்வொரு வங்கியைப் பொறுத்து மாறுபடும்.அக்., 2 மற்றும் 3ம் தேதி விடுமுறை. 4ம் தேதி சனிக்கிழமை, வங்கி அரை நாள் இயங்கும்.தமிழகத்தைப் பொறுத்தவரை, பக்ரீத்துக்கு, 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே, பக்ரீத்துக்கு என, தனியாக விடுமுறை இல்லை. எனவே, 6ம் தேதி வழக்கம் போல், வங்கிகள் இயங்கும்.இணையதள வங்கி, மொபைல் வங்கி முறைகள் நடைமுறைக்கு வந்தபின், வங்கிக்கு வந்து பரிவர்த்தனை செய்யும் பணிகள், 40 சதவீதத்துக்கு மேல் குறைந்துவிட்டன. காசோலை பரிவர்த்தனை மட்டுமே, வங்கிகளுக்கு வருகின்றன. 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ், பணம் எடுப்பவர்களுக்கு ஏ.டி.எம்., வசதி உள்ளது.எனவே, தமிழகத்தைப் பொறுத்தவரை, வங்கிகளுக்கு தொடர்ச்சியாக, இரண்டு நாள்கள் தான் விடுமுறை. இதனால், ஏ.டி.எம்., சேவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், முற்றிலுமாக வங்கி சேவை முடங்கி விடாது.இவ்வாறு, வங்கி வட்டாரங்கள் கூறின.