34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து ஆகாது சுப்ரீம் கோர்ட்டில் பல்கலைக்கழக மானியக் குழு தகவல்


புதுடெல்லி, செப்.26-34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட மாட்டாது என்று பல்கலைக்கழக மானியக் குழு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்துள்ளது.அங்கீகாரம் ரத்து செய்ய
பரிந்துரைஇந்தியாவில் மொத்தம் உள்ள 127 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் தரமற்ற கல்வி வழங்கப்பட்டு வருவதாகக்கூறி சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2006-ம் ஆண்டு விப்லவ் சர்மா என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பி.என்.தாண்டன் குழு மூலம் மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது. நாடு முழுவதும் உள்ள 122 நிகர்நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்த டாண்டன் குழு, அவற்றை 3 பிரிவுகளாக பிரித்தது. இதில், கடைசி பிரிவில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்த 44 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என்று பரிந்துரை அளித்தது. இந்த பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில கல்வி நிறுவனங்களும் அடங்கும்.இதில் ஒரு பல்கலைக்கழகம் பெயரை ‘உயர்கல்வி சிறப்பு மையம்’ என்று மாற்றிக் கொண்டது. 2 பல்கலைக்கழகங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை அரசிடம் மீண்டும் திரும்ப ஒப்படைத்து விட்டன. தற்போது மீதமுள்ள 41 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.அங்கீகாரம் ரத்து இல்லைஇந்தநிலையில் நேற்று சுப்ரீம்கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் விக்ரம்ஜித் சென் ஆகியோர் முன்னிலையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. பல்கலைக்கழக மானியக்குழு சார்பாக ஆஜரான வக்கீல் மணிந்தர் சிங், நீதிபதிகளிடம் 34 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்குவது என்ற முடிவை மேற்கொண்டுள்ளதாகவும், 7 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்க இயலாது என்றும் தெரிவித்தார்.விரிவான அறிக்கைஇந்த 7 பல்கலைக்கழகங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் அடங்கும். ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, பல்கலைக்கழகத்தை முறையான ஆய்வு செய்யாமலேயே அங்கீகாரம் மறுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே பல்கலை மானிய குழு பல்கலைக்கழகத்தை நேரில் ஆய்வு செய்து உரிய முடிவை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாதாடினார். இதனை ஏற்ற நீதிபதிகள், பல்கலைக்கழக மானியக் குழு 8 வார காலத்திற்குள் ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.இதனைத்தொடர்ந்து மற்றொரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பாக மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான வழக்கு விசாரணை நாளை (இன்று) எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.நேரடி விசாரணை கடந்த 19-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது சர்ச்சைக்குரிய 41 பல்கலைக்கழகங்களையும் காணொலிக் காட்சி (வீடியோ கான்பரன்சிங்) மூலம் விரிவாக ஆய்வு மேற்கொண்டதாகவும், அந்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என்றும் பல்கலைக்கழக மானியக்குழுவின் சார்பில் கூறப்பட்டது. இந்த விளக்கத்தை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. காணொலிக்காட்சி வழியாக ஆய்வு செய்வது தேவையான விளக்கத்தை தராது என்றும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நேரடியாகச் சென்று ஆய்வு செய்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.