பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறை: காப்பி அடிப்பதை தடுக்க நடவடிக்கை

மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் பிளஸ் 2 தேர்வில் மீண்டும் ‘ஜம்ப்ளிங்’ வினா முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல்,தாவரவியல், விலங்கியல், கணிதம் ஆகிய 6 பாடங் களுக்கான தேர்வில் ஒரு மதிப் பெண் வினாக்கள் இடம்பெறும். கணித பாடத்தில் 40 ஒரு மதிப்பெண் வினாக்களும், மற்ற 5 பாடங்களில் தலா 30 வினாக்களும் கேட்கப்படும்.
மாணவர்கள் காப்பி அடிப் பதை தடுக்கும் வகையில் இப்பாடங்களுக்கான ஒரு மதிப்பெண் வினாக்களில் ‘ஜம்ப்ளிங்’ என்ற முறை கடந்த ஆண்டு வரை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த முறையில், எல்லா வினாக்களும் ஒன்று தான் என்றாலும், அவை மாறி மாறி இடம்பெற்றிருக்கும். உதாரணத்துக்கு குறிப்பிட்ட ஒரு வினா, ஒரு மாணவ ருக்கு 7-வதாகவும் இன்னொரு வருக்கு 20-வது இடத்திலும் இருக்கலாம். கேள்விகள் இடம் மாறி இருப்பதால் மாணவர்கள் காப்பி அடிக்க இயலாது. ‘ஜம்ப்ளிங்’ முறையில் ஏ, பி என இரண்டு வகையான வினா தொகுப்புகள் அச்சிடப்பட்டன.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வின்போது, விடைத்தாளில் ரகசிய குறியீடு (பார்கோடு), மாணவரின் பதிவு எண்ணுடன் கூடிய விடைத்தாள் கட்டு, ஒவ்வொரு தேர்வுக் கூடத்துக் கும் தனித்தனி வினா கட்டு என தேர்வுத்துறை பல புதிய நடைமுறைகளை அறிமுகப் படுத்தியது. அதனால், ஜம்ப்ளிங் முறையில் ஏ, பி என இரண்டு வகையான வினாக்கள் வழங்கும் முறை கைவிடப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப் பட்டது.
இதற்கிடையே, ஒருசில இடங்களில் அறிவியல், கணிததேர்வுகளின்போது ஒரு மதிப்பெண் வினாக்களை சில மாணவர்கள் காப்பி அடித்த தாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஏற்கெனவே இருந்ததைப்போல பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங் கியல், கணிதம் ஆகிய 6 பாடங்களில் ஒரு மதிப்பெண் வினாக்களில் மீண்டும் ஜம்ப்ளிங் முறையை கொண்டுவர அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.
இந்த மாதம் நடக்கவுள்ள தனித்தேர்வர்களுக்கான பிளஸ் 2 தேர்வில் இருந்தே இந்த முறையை நடைமுறைப்படுத்த தேர்வுத்துறை திட்டமிட் டுள்ளது.