அரசு மருத்துவமனைகளுக்கு 2,176 புது டாக்டர்கள் வாரியம் மூலம் தேர்வு நடத்தி நியமிக்க முடிவு

தமிழகத்தில், புதிதாக உருவாக்கப் பட்டுள்ள, 2,176 டாக்டர் பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, நேரடி தேர்வு நடத்தி
நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான தேர்வு, வரும், 28ம் தேதி நடக்க உள்ளது.

நேரடி தேர்வு:தமிழகத்தில், ஆரம்ப சுகாதார நிலையம் முதல், மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைகள் வரையிலான, அரசு மருத்துவமனைகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள், பல்வேறு நிலைகளில்
பணியாற்றி வருகின்றனர்.
சிறப்பு நிலையில், 1,500 உட்பட, 2,400க்கும் மேற்பட்ட டாக்டர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதுதவிர, மருத்துவமனைகள் தரம் உயர்வு, மக்கள் தொகை அதிகரிப்பாலும், அதற்கேற்ப டாக்டர்களை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதைக் கருதி, 2,142 உதவி டாக்டர்கள், 34 உதவி பல்
டாக்டர்கள் என, மொத்தம், 2,176 உதவி டாக்டர் பணியிடங்களை, அரசு உருவாக்கி உள்ளது.இந்த பணியிடங்களுக்கு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், நேரடி தேர்வு நடத்தி, டாக்டர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதற்கான, எழுத்துத்
தேர்வு, வரும், 28ம் தேதி நடத்தப்படும் என, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இரண்டாம் முறையாக, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம், தேர்வு நடத்தப்படுகிறது.
வலியுறுத்தல்:இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்வில், 2,000 பேர் வரை
நியமிக்கப் பட்டனர்.தமிழகம் முழுவதும், காலியாக உள்ள சிறப்பு நிலை டாக்டர்கள் மட்டுமின்றி, செவிலியர், மருத்துவப் பரிசோதகர்கள் உள்ளிட்ட, சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களையும் நிரப்ப, அரசு முயற்சிக்க வேண்டும் என, டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.