திருவண்ணாமலை மாணவர்களுடன் உரையாடுகிறார் மோடி: ஆசிரியர் தினத்தில் ‘வீடியோ-கான்பரன்சிங்’ மூலம் ஏற்பாடு

பிரதமர் நரேந்திர மோடி | கோப்பு படம்
ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ந் தேதி திருவண்ணாமலை பள்ளி மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடுகிறார். அப்போது மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் தினத்தன்று சிறந்த ஆசிரியர்களுக்கு டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பது வழக்கம்.
இந்நிலையில், ஆசிரியர் தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பள்ளி மாணவர்களுடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.
திருவண்ணாமலை பள்ளி தேர்வு
டெல்லியில் பள்ளி மாணவர்கள் மத்தியில் நேரில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அவரது உரையை கேட்கவும், அவருடன் வீடியோ-கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடவும், கேள்விகள் கேட்கவும் தமிழ்நாட்டில் திருவண் ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.
திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாட மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையத்தில் (நிக் சென்டர்) பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
பிரதமருடனான இந்த கலந்துரை யாடலில் தங்கள் பள்ளியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் கலந்துகொள்ள இருப்பதாக திருவண்ணாமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் கே.சீனிவாசன் ‘தி இந்து’ நிருபரிடம் தெரிவித்தார்.
கேள்விக்குப் பதில்
ஆசிரியர் தினத்தன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.45 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. டெல்லியில் மாணவர்கள் மத்தியில் பேசும் மோடியின் பேச்சு, வீடியோ-கான்பரன்சிங் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெறும்.
பின்னர் மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிப்பார்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது சென்னையில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில இடங்களில் இதேபோன்று வீடியோ-கான்பரன்சிங் மூலம் டீக்கடைக்காரர்களிடமும் டீ குடிக்க வந்தவர்களிடமும் நரேந்திர மோடி கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.