என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஒரு லட்சம் காலி இடங்கள் ஏன்? பொன். தனசேகரன்

 தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான கவுன்சலிங் முடிந்த பிறகும்கூட, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.


தமிழ்நாட்டில் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் 2.11 லட்சம் இடங்கள் இருந்த போதிலும்கூட, அரசு ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்கள்  1.73 லட்சம் பேர்தான். இதையடுத்து, கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் காலி இடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டு கவுன்சலிங்கிற்கு அழைக்கப்பட்ட மாணவர்களில் 59 ஆயிரம் மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு வரவில்லை.

கவுன்சலிங்கிற்கு வந்த மாணவர்களில் 499 மாணவர்கள், எந்தக் கல்லூரியையும் தேர்வு செய்யாமல் திரும்பி விட்டனர். அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட முதல் கட்ட கவுன்சலிங் முடிவில் 1.02 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன.

அண்ணா பல்கலைக்கழகத்திலும் இணைப்புக் கல்லூரிகளிலும் தமிழ் மீடியத்தில் பொறியியல் படிப்புகள் சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப் பட்டன. ஆனால், இந்த ஆண்டில் சிவில் பாடப் பிரிவில் 659 இடங்களில் 319 இடங்களே நிரம்பியுள்ளன. மெக்கானிக்கல் பாடப்பிரிவில் உள்ள 718 இடங்களில் 261 இடங்கள்தான் நிரம்பியுள்ளன. இந்த தமிழ் மீடியம் படிப்புகளில் சேர்ந்துள்ளவர்களில் கணிசமானவர்கள் முதல் தலைமுறைப்பட்டதாரிகள்.

“இந்த ஆண்டு கவுன்சலிங் மூலம் பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதல் தலைமுறை பட்டதாரிகளின் எண்ணிக்கை 60 ஆயிரம் பேர். இவர்களில் பலர் படிப்புக் கட்டணச் சலுகை இருப்பதால் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கட்டணச் சலுகையை அரசு அளித்திருக்காவிட்டால் இந்த காலி இடங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கும்” என்கிறார்கள் சில கல்லூரிப் பேராசிரியர்கள். ஐ.டி. போன்ற குறிப்பிட்ட சில படிப்புகளில் சேருவதில் மாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளதால், அந்தப் படிப்புகளில் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 35 சதவீதத்திலிருந்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சலின் விதிமுறைப்படி 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதும் காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஒரு காரணம் என்று சில பேராசிரியர்கள் குறிப்பிட்டாலும்கூட, மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்று பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்கள் படிக்கத் திணறுவதையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை.

அரசு ஒதுக்கீட்டின்கீழ் உள்ள காலி இடங்களைப்போல நிர்வாக ஒதுக்கீட்டின் கீழும் காலி இடங்கள் நிறைய இருக்கும். மொத்தமாகச் சேர்த்துப் பார்த்தால் மொத்தக் காலி இடங்களின் எண்ணிக்கை 1.30 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்கிறார்கள்.

பொறியியல் கல்லூரிகளில் இந்த அளவுக்குக் காலி இடங்கள் ஏற்பட்டுள்ளதற்குக் காரணம் என்ன? “ஐ.டி. நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது, பொறியியல் படிப்புகளின் பக்கம் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்க முக்கியக் காரணம். ஏதாவது, படிப்பைப் படிப்பதைவிட பொறியியல் படிப்பைப் படிப்பதன் மூலம் உடனடியாக வேலைவாய்ப்பைப் பெறலாம் என்ற எண்ணத்துடன் கடன் வாங்கியாவது படிப்பது என்று, மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளை நோக்கிப் படை எடுத்தனர்.

இதற்கு ஏற்ப தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. தற்போது நிலைமை மாறிவிட்டது. என்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்த மாணவர்களில் கணிசமானவர்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். தங்களது வீடுகளின் அருகில் உள்ள பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிப்பதைப் பார்த்து, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மற்ற மாணவர்களிடமும் ஆர்வம் குறைந்து வருகிறது” என்கிறார் கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன்.

“கல்லூரிகளின் எண்ணிக்கை உயர்ந்த அளவுக்குத் தரம் உயரவில்லை. பல கல்லூரிகளில் போதிய தகுதி பெற்ற ஆசிரியர்கள் இருப்பதில்லை. பல பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தாலே இது தெரியவரும். இதனால், தொழில் துறை நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் மாணவர்களின் தரம் இருப்பதில்லை.

அதனால், அந்த மாணவர்களுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது. அத்துடன், மற்றொரு காரணம், நமது என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பாடத்திட்டம். அண்ணா பல்கலைக்கழகத்தில் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரிக்கு இருப்பது ஒரு பாடத்திட்டம். தன்னாட்சிக் கல்லூரிகளுக்கு ஒரு பாடத்திட்டம். மற்ற கல்லூரிகளுக்கு ஒரு பாடத்திட்டம்.

இந்த குறைந்த தரத்திலான பாடத்திட்டத்தில் கூட, பல ”சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு திணறுகிறார்கள் என்பதுதான் சோகம். இதனால், பொறியியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்ந்து முதுநிலைப் பட்டப் படிப்புகளைப் படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதும் கடினமாகி விடுகிறது. படிக்கும் மாணவர்களை வேலைக்கு ஏற்ற தரத்துடன் உருவாக்க வேண்டியது அவசியம்” என்கிறார் அவர்.

“கல்லூரிகளின் எண்ணிக்கையும் மாணவர் எண்ணிக்கையும் ஒரு புறம் உயர்ந்து வரும் சூழ்நிலையில், வேலைவாய்ப்புக்கான அளவும் குறைந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்தும் கூட அதைவிட்டுவிட்டு பொறியியல் படிப்புகளில்  சேர்ந்த மாணவர்களைப் பார்த்தோம். அதற்குக் காரணம், பொறியியல் படிப்பை முடித்தவுடன் உடனடியாகக் கிடைத்த வேலைவாய்ப்பு.

ஆனால் தற்போது கேம்பஸ் பிளேஸ்மெண்ட் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதுவும் பொறியியல் படிப்புகளின் மீது மாணவர்களுக்கு உள்ள ஆர்வம் குறைய முக்கியக் காரணம்” என்கிறார் கல்வி ஆலோசகரும் பொறியியல் கல்லூரி இணைப் பேராசிரியருமான மூர்த்தி செல்வக்குமரன்.

“தற்போதுள்ள 538 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 150 பாப்புலர் கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் பூர்த்தியாகி விட்டன. ஆனால், சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 20 சதவீத இடங்களே பூர்த்தியாகி உள்ளன. காலி இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, கல்லூரியில் படிப்புத் தரத்தைப் பாதிக்கும்.

கல்லூரிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை குறையும்போது, சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் தரத்தை எதிர்பார்க்க முடியாது. போதிய தரமான தகுதி பெற்ற ஆசிரியர்களை சம்பளம் கொடுத்து வைத்திருப்பதும் கடினம்.

ஒரு கல்லூரியில் ஏற்படும் காலி இடங்களின் எண்ணிக்கை சில ஆண்டுகள் தொடர்ந்தால் அந்தக் கல்லூரியை நடத்துவது என்பது சாத்தியமில்லாமல் போய்விடும். கல்லூரியில் தரம் குறையும்போது, மாணவர்களை ஈர்ப்பதும் கடினம். ஏற்கெனவே படித்து வரும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதும் கடினமாகிவிடும்” என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

நிறைய பணம் செலவழித்து என்ஜினீயரிங் படிப்பைப் படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பதைவிட, குறைந்த செலவில் கலை, அறிவியல் படிப்புகளைப் படிக்கலாமே என்ற எண்ணம் பல மாணவர்களிடம் மேலோங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இருந்த போதிலும், அதன் தரத்தை உயர்த்தி மாணவர்களுக்குத் தரமான கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் சூழ்நிலை ஏற்பட்டால்தான் இந்த நிலைமையில் மாறுதல் ஏற்படும்.

இல்லாவிட்டால் இந்த நிலைமை வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து பல கல்லூரிகளின் செயல்பாட்டையே கேள்விக்குறிக்குள்ளாக்கி விடும் என்பது கல்வியாளர்களின் கருத்து. எனவே, பொறியியல் கல்லூரிகளில் உள்ள காலி இடங்களை வெறும் புள்ளிவிவரமாக மட்டும் பார்த்துவிட்டு நகர்ந்து போய்விட முடியாது.