ஆசிரியர் தகுதித்தேர்வில் வழங்கப்பட்ட மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வேண்டும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு


மதுரை, ஆக.20-ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ஆசிரியர் தகுதித்தேர்வுமதுரை சொக்கிகுளத்தை சேர்ந்தவர் ஜெயகிருஷ்ணா.
இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் மதிப்பெண் நிர்ணயம் செய்தது. அதன்பின்பு, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாநிலங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மதிப்பெண் சலுகை வழங்கலாம் என்று அறிவித்தது. அதன்படி, தமிழக அரசு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கியது. கற்பித்தல் அனுபவம்அதாவது, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆசிரியர் தகுதித்தேர்வில் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் தகுதி பெற்றவர்களாக கருதப்படுவர் என்று அரசு அறிவித்தது. தகுதித்தேர்வில் பெறும் மதிப்பெண் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பி.எட். படிப்பு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்களை(வெயிட்டேஜ் மதிப்பெண்) அடிப்படையாக வைத்து பட்டதாரி ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. நான், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவள். நான், தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளேன். மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதால் என்னை விட குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டனர். நான், 1996-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு கற்பித்தல் அனுபவம் உள்ளது. சரியில்லாத நடைமுறைமுதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே, பட்டதாரி ஆசிரியர் பணிக்கும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, கற்பித்தல் அனுபவம் ஆகியவற்றுக்கும் தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். தகுதித்தேர்வு என்பது அனைவருக்கும் பொதுவானது தான். எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2, பட்டப்படிப்பு போன்றவற்றில் தகுதி மதிப்பெண் (தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்) என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே உள்ளது. அப்படி இருக்கும்போது ஆசிரியர் தகுதித்தேர்வில் மட்டும் மதிப்பெண் சலுகை என்பது சரியில்லாத நடைமுறை ஆகும். எனவே, அந்தந்த மாநிலங்கள் தகுதித்தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவுப்படி தமிழக அரசு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நோட்டீசுஇந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் டி.ஏ.எபனேசர் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு சம்பந்தமாக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். மேலும், பட்டதாரி ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்றும் நீதிபதி அறிவித்தார்.