தொடர் போராட்டம் பட்டதாரி ஆசிரியர்கள் கைதாகி விடுதலை


சென்னை, ஆக.22-ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும். வெயிட்டேஜ் முறையை முழுவதும் ரத்து செய்யவேண்டும்
என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த 18-ந் தேதி நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் அன்று கைது செய்து பின்னர் மாலையில் விடுவித்தனர். இந்த நிலையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அவரிடம் கோரிக்கைகளை தெரிவிக்க உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்தனர்.இதையடுத்து, முதல்- அமைச்சர் வீடு, தலைமை செயலகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்த நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று காலையில் கூடினார்கள். இதையறிந்த போலீசார், அவர்களை அங்கு தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அவர்களை, மைலாப்பூரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் போலீசார் அடைத்து வைத்தனர். பின்னர், அவர்கள் அனைவரையும் மாலையில் போலீசார் விடுவித்தனர்.