'குறை தீர்ப்பு கூட்டத்தில் அதிகாரிகள் பதில் அளிப்பதில்லை' : தொடக்க கல்வி ஆசிரியர்கள் குற்றச்சாட்டு - தினமலர்

'தொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூட்டம், வெறும் சடங்காக நடக்கிறது. மனுக்களை வாங்கும் அதிகாரிகள், பதில் அளிப்பது இல்லை' என, தொடக்க கல்வி ஆசிரியர்கள், குற்றம் சாட்டுகின்றனர்.

தொடக்க கல்வித் துறையில், 1.5 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், பதவி உயர்வு, சம்பள உயர்வு, விடுமுறை நாட்களுக்கு பணம் பெறுதல் உள்ளிட்ட, பல கோரிக்கைகள் தொடர்பாக, அவ்வப்போது, சென்னையில் உள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தபடி உள்ளனர். இதனால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதித்து வருகிறது. கோரிக்கையை, அதிகாரிகள் கண்டு கொள்ளாதபோது, துறைக்கு எதிராக, ஆசிரியர், வழக்கு தொடரும் போக்கும் அதிகரித்து வருகிறது.
மாதத்தின் முதல் சனிக்கிழமை ஆசிரியர் பிரச்னையை, உடனுக்குடன் தீர்க்கும் வகையில், குறை தீர்ப்பு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, மாதத்தின் முதல் சனிக்கிழமை, பள்ளி முடிந்தபின், மாலை வேளையில், உதவி தொடக்கக் கல்வி அலுவலரிடம், ஆசிரியர், கோரிக்கை மனு அளிக்க வேண்டும். இதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரி, உடனடியாக பதில் அளிக்க வேண்டும். தீர்க்க முடியாத பிரச்னை எனில், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியை சந்தித்து, மனு அளிக்க வேண்டும்.

இதிலும், பிரச்னை தீரவில்லை எனில், மூன்றாவது சனிக்கிழமை, சென்னையில் உள்ள தொடக்க கல்வி இயக்குனரை, நேரில் சந்தித்து பிரச்னையை கூறலாம். ஒரு ஆண்டு முன் வரை, உருப்படியாக நடந்து வந்த இந்த குறை தீர்ப்பு கூட்டம், தற்போது, வெறும் சடங்குக்கு நடந்து வருவதாக, தொடக்க கல்வி ஆசிரியர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்ற கழகத் தலைவர், சிங்காரவேல் கூறியதாவது: மற்ற அரசு துறைகளை விட, கல்வித் துறையில் தான், வழக்குகள் அதிகளவில் உள்ளன. இது, அதிகாரிகளுக்கும் தெரியும்.

கோரிக்கைகள் : ஆசிரியர்களின், சிறிய கோரிக்கை, பிரச்னைகளை கூட, மாவட்ட அளவில் உள்ள அதிகாரிகள் தீர்ப்பதில்லை. இதனால், நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது.

குறை தீர்ப்பு கூட்டங்களில், மனு அளித்தால், என்ன பதில் என்பதை, எழுத்து பூர்வமாக அதிகாரிகள் தர வேண்டும். ஆனால், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், எழுத்துப் பூர்வமாக பதில் அளிப்பது இல்லை. கண்துடைப்புக்காக, குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படுகிறது. 'துறையின் பதிலை அறியாமல், வழக்கு போடக் கூடாது' என, தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட வேண்டும். இதன்மூலம், ஆசிரியர், துறை அதிகாரிகளின் பதில் பெறுவதை, உறுதி செய்ய முடியும். இவ்வாறு, சிங்காரவேல் கூறினார்.