பள்ளி கல்வித் துறை முதன்மைச் செயலர்

தேர்ச்சி விகிதம் 95 % உயர வேண்டும்:
அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 90-லிருந்து 95 சதவீதமாக உயர வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா
அறிவுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 5 மாவட்டங்களுக்கான கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பொதுத் தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, இந்த ஆய்வுக் கூட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி. வீரமணி தலைமை வகித்துப் பேசினார்
பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி. சபீதா பேசியதாவது:
கல்வித் துறையின் வளர்ச்சிக்கு ரூ. 65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
கடந்த 2012ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 358 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றன. 2013இல் 453 பள்ளிகளாகவும், 2014இல் 887 பள்ளிகள் என 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளன.
அதேபோல் பிளஸ் 2 தேர்வில், 2013ஆம் ஆண்டு 42ஆக இருந்த 100 சதவீத தேர்ச்சிப் பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை, 2014இல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன. மேலும், மாநில அளவிலான முதல் 3 இடங்களில், அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சிப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு 71,708 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டது. அதில், 53,788 இடங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வமும் தேவை என்பதைக் கருத்தில்கொண்டு, 2011-12 ஆம் கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சதுரங்க விளையாட்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில், மாநிலம் முழுவதிலுமிருந்து 11.50 லட்சம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதில் சிறந்த 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோன்று, நிகழாண்டில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்க 15 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில், மாநிலத்தின் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 90 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், திண்டுக்கல் மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்கள், தர வரிசையில் பின்னடைவு பெற்றுள்ளன. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு 8ஆம் இடத்திலிருந்த மதுரை மாவட்டம் 16ஆவது இடத்துக்கும், 21ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 22ஆவது இடத்துக்கும், 17ஆவது இடத்திலிருந்த தேனி மாவட்டம் 25ஆவது இடத்துக்கும் பின்னோக்கிச் சென்றுள்ளன.
அதேபோன்று, பிளஸ் 2 தேர்வில் முதலிடத்திலிருந்த விருதுநகர் 3ஆம் இடத்துக்கும், 12ஆம் இடத்திலிருந்த சிவகங்கை 13ஆவது இடத்துக்கும், 8ஆம் இடத்திலிருந்த மதுரை 16ஆவது இடத்துக்கும், 17ஆவது இடத்திலிருந்த திண்டுக்கல் 19ஆம் இடத்துக்கும், 9ஆம் இடத்திலிருந்த தேனி 15ஆவது இடத்துக்கும் தரம் குறைந்துவிட்டன.
பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டும். பொதுத் தேர்வில் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95 சதவீதமாக உயர்வதற்கு தலைமையாசிரியர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.

பிற்பகலில் நடைபெற்ற கூட்டத்தில், ஈரோடு மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் சிறந்த தேர்ச்சி விகிதத்தை உருவாக்க, ஆசிரியர்கள் மற்றும் 234 தலைமையாசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.