புதிய முயற்சிகளே வெற்றிக்கு அடிப்படை: அப்துல் கலாம்

வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் மேற்கொள்ளும் புதிய முயற்சிகளே வெற்றிக்கு வழிவகுக்கும் என குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் கூறினார்.சென்னை திருவேற்காட்டில் உள்ள எஸ்.ஏ. பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாணவர்களிடையே அப்துல் கலாம் பேசியது:

ஆண்டுதோறும் பொறியியல் துறையில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள் பெருகிவருகின்றன. அதற்கேற்றவாறு, மாணவர்களின் அறிவுத் திறன் மேம்பட்டு வருகிறது. இன்றைய சூழலில், கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்கள் தனியாகவும், குழுவாகவும் புதிய தொழில்களை மேற்கொண்டு அதில் வெற்றி பெறுகின்றனர்.

யாராக இருந்தாலும் அவர் எந்தத் தொழிலைச் செய்தாலும், அதில் புதுமையைப் புகுத்தி, நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினால் வெற்றி சாத்தியமாகும். கல்வி, தொழில் என நீங்கள் சார்ந்துள்ள அனைத்து விதமான செயல்பாடுகளிலும் சமுதாயத்துக்கான பங்களிப்பு நிச்சயம் இருக்க வேண்டும்.
தாமஸ் ஆல்வா எடிசன், மேரி கியூரி அம்மையார், ரைட் சகோதரர்கள், அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் ஆகியோர் தாங்கள் எடுத்த முயற்சிகளில் எளிதாக வெற்றி பெறவில்லை.

கணக்கற்ற தோல்விகளைச் சந்தித்த பிறகுதான் அவர்களால் சாதிக்க முடிந்தது. எனவே, சின்னச் சின்ன தோல்விகள் ஏற்பட்டாலே துவண்டு போகும் மனநிலையை முதலில் மாற்றுங்கள். எது வந்தாலும் மன உறுதியுடன் எதிர்கொள்வேன் என்ற பக்குவம் வேண்டும். இலக்கை அடையும் வரை உங்கள் முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, மாணவர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அப்துல் கலாம் பதிலளித்தார்.

கேள்வி: வருங்காலத்தில் ஆசிரியர்களின் இடத்தை தொழில்நுட்ப வளர்ச்சியால் நிரப்ப முடியுமா?
பதில்: ஒரு கம்ப்யூட்டரால் மற்றொரு கம்ப்யூட்டரை உருவாக்க முடியும். ஆனால், அதே கம்ப்யூட்டரால் மனிதனை உருவாக்க முடியாது. அதேபோல், வழிகாட்டு நெறியும், கருணை உள்ளமும் படைத்த ஆசிரியர்களின் இடத்தை எந்தத் தொழில்நுட்பத்தாலும் நிரப்ப முடியாது.

கே: இந்தியா 2020-இல் வல்லரசாகும் என்று நீங்கள் கூறியது, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் எந்தளவுக்குச் சாத்தியம்?
ப: உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாறுதல்களுக்கு ஏற்ப, நமது பொருளாதாரமும் அடிக்கடி சில மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. இடையிடையே ஏற்பட்ட சில பின்னடைவுகளுக்களால் நமது முன்னேற்றம் முற்றிலுமாக தடைபட்டு விடாது. நாட்டின் தொழில்நுட்பம், இளைஞர்களின் அயராத முயற்சிகள் நமது இலக்குகளை அடைய உதவும்.

கே: உங்களது நூல்களில், விஞ்ஞானி விக்ரம் சாராபாயை சில இடங்களில் மேற்கோள் காட்டியுள்ளீர்கள். அதன் மூலம் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
ப: வாழ்வில் நீங்கள் முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டிய மனிதர்களில் அவரும் ஒருவர் என்பதை உங்களுக்கு நினைவூட்ட அந்த மேற்கோள் பயன்படும் என நினைக்கிறேன்.

கே: அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல்வேறு துறைகளில் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளதே?
ப: உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க துறைகளில் இந்தியா பிற நாடுகளுக்கு முன்னோடியாக இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களைப் போன்ற இளைஞர்களின் ஆற்றலால்தான் நமது ஒட்டுமொத்த வளர்ச்சி வேகத்தை துரிதப்படுத்த முடியும்.
நிகழ்ச்சியில், கல்லூரியின் தாளாளர் டி.சபரிநாத், முதல்வர் எஸ்.சுயம்பழகன், இயக்குநர் பி.வெங்கடேஷ்ராஜா, தலைவர் டி.துரைசாமி, செயலர் டி.தசரதன், இணைச் செயலர் எஸ்.கோபிநாத், துணைத் தலைவர் டி.பரந்தாமன், பொருளாளர் எஸ்.அமர்நாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.