ஆர்.டி.இ. சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் 89,382 மாணவர்கள் சேர்ப்பு

சென்னை: இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கும் எல்.கே.ஜி. முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை ஆர்.டி.இ. இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டும் என்பது சட்டம். இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது.

2013 14ல் சேர்ந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணம் 35 கோடி ரூபாயை பள்ளிகளுக்கு வழங்காததால் நடப்பு கல்வி ஆண்டில் ஆர்.டி.இ. பிரிவில் மாணவர் சேர்க்கை நடத்த பள்ளி நிர்வாகிகள் முரண்டு பிடித்தனர். பின் அதிகாரிகள், தனியார் பள்ளி சங்க நிர்வாகிகளிடம் பேசி நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன்பின், மாணவர் சேர்க்கை துவங்கியது. கடந்த மே மாதம் முதல் நேற்று வரை 89,382 மாணவர்கள் ஆர்.டி.இ. இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு 49,864 பேர் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 39,518 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.

இவர்களுக்கான நிதி சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு விரைவில் வழங்கப்படும் எனவும், கடந்த ஆண்டுக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து விரைவில் கிடைக்கும் எனவும் கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.
ஆர்.டி.இ. பிரிவின் கீழ் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் உள்ளன. இதில் 89,382 இடங்களே நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு துறை வாரியாக சேர்ந்த மாணவர் விவரம்
துறை   -  பள்ளி  எண்ணிக்கை  -  சேர்ந்த மாணவர்
பள்ளி கல்வித்துறை  -  369  -  2,959
தொடக்க கல்வித்துறை  -  5,441  -  43,837
மெட்ரிக் பள்ளி இயக்குனரகம்  -  3,642  -  42,586
மொத்தம்  -  9,452  -  89,382