தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு: சென்னையில் 4 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. சென்னை மாவட்டத்தில் காலியாக இருந்த 4 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஆசிரியர் கலந்தாய்வு

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள முதுகலை, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு 2012-13 கல்வியாண்டில் நடத்தப்பட்டது. இந்த தேர்வை 6 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியதில், 45 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.

இவர்களில், மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் 14 ஆயிரத்து 700 பேர் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களது பெயர் பட்டியல், ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி செப்டம்பர் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

4 காலி பணியிடங்கள்

நேற்று முதுநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் வழங்கப்பட்டது. சென்னை மாவட்டத்திற்கான கலந்தாய்வு, மைலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை தொடங்கியது.

முதுநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வான 28 பேர் கலந்தாய்வுக்கு வந்தனர். இதில் சில பெண்கள் பச்சிளங் குழந்தையுடன் வந்திருந்தனர். ‘நெட் ஒர்க்’ பிரச்சினையால் கலந்தாய்வு தாமதமாக தொடங்கியது. சென்னையில் 4 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

4 ஆசிரியர்கள் நியமனம்

எழும்பூர் பெண்கள் மாநிலப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் பணியிடமும், மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியர் பணியிடமும், சைதாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மைக்ரோ பயாலஜி ஆசிரியர் பணியிடமும், திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் மனை அறிவியல் ஆசிரியர் பணியிடமும் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

கலந்தாய்வில், கொளத்தூரை சேர்ந்த தரணி விலங்கியல் ஆசிரியர் பணியிடத்தையும், கோடம்பாக்கத்தை சேர்ந்த பாரதி வணிகவியல் ஆசிரியர் பணியிடத்தையும், தரமணியை சேர்ந்த மணிமேகலை மைக்ரோ பயாலஜி ஆசிரியர் பணியிடத்தையும், வேளச்சேரியை சேர்ந்த எழிலரசி மனை அறிவியல் ஆசிரியர் பணியிடத்தையும் தேர்தெடுத்தனர்.

இவர்களுக்கான பணியாணையை சென்னை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் அவர்களிடம் வழங்கினார். இவர்கள் நாளை முதல் தாங்கள் தேர்ந்தெடுத்த பள்ளிகளில் பணியாற்ற உள்ளனர்.