சிவில் சர்வீசஸ் தேர்வை நாடு முழுவதும் 4½ லட்சம் பேர் எழுதினர்


புதுடெல்லி, ஆக.25-ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நேற்று நாடு முழுவதிலும் 59 நகரங்களில் உள்ள 2,137 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை எழுத 9 லட்சத்து 44
ஆயிரத்து 926 பேர் விண்ணப்பித்து இருந்தனர். எனினும் இவர்களில் 6 லட்சத்து 80 ஆயிரத்து 455 பேர் மட்டுமே தேர்வு எழுதுவதற்கான அனுமதி அட்டையை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்திருந்தனர்.எனினும், தேர்வு நடந்தபோது இவர்களில் 4 லட்சத்து 51 ஆயிரத்து 602 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த தகவலை டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்த மத்திய பணியாளர் தேர்வாணைய செயலாளர் அசிம் குரானா கூறுகையில், ‘‘கடந்த ஆண்டை விட இந்த வருடம் சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் பேர் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வை கூடுதலாக எழுதினார்கள். தேர்வு நடந்த மையங்களில் எவ்வித எதிர்ப்பும் இன்றியும், சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லாமலும் தேர்வுகள் அமைதியாக நடந்து முடிந்தன. இது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய ஒன்று’’ என்று குறிப்பிட்டார். அண்மையில், சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வில் சிசாட் என்னும் திறனறித்தேர்வை ரத்து செய்யக்கோரி பட்டதாரிகள் டெல்லியில் போராடியதும், இதையடுத்து திறனறித் தேர்வின் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என மத்திய அரசு அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.