14 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: முதல் நாளில் 906 பேருக்கு பணி நியமன ஆணை

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 700 ஆசிரியர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்கியது. மாநிலம் முழுவதும் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வின் முதல் நாளில், 906 பேருக்கு பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரத்து 400 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளன.



ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் 2 ஆயிரத்து 353 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், 10 ஆயிரத்து 698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தமாக 14 ஆயிரத்து 700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமனக் கலந்தாய்வு தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சனிக்கிழமை தொடங்கியது.

முதல் நாளில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்காக மாவட்டத்துக்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதில், 906 பேருக்கு பணி நியமனத்துக்கான உத்தரவு வழங்கப்பட்டது. இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக.31) வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: இதற்கிடையே, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட ஆயிரத்து 649 பேருக்கும், 167 பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கும் இணையதளம் வழியாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. மாவட்டத்துக்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 2-ஆம் தேதியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்துக்குள்) செப்டம்பர் 3-ஆம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 4-ஆம் தேதியும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

9 மாவட்டங்களில் உள்ளோருக்கு...சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இல்லை. இதனால், வரும் திங்கள்கிழமை (செப்.1) நடைபெறவுள்ள கலந்தாய்வில் அந்த ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்க வேண்டாம் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்குப் பதிலாக, வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (செப். 2) நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் எனவும், அன்றைய தினம் அவர்களது மாவட்டத்தில் குறிப்பிட்டுள்ள மையத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணியிட ஒதுக்கீட்டு உத்தரவைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது