12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் வழங்கினார்

மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகங்களில் காலியாக உள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் படை வீரர்களின் அனைத்து நலத் திட்டப் பணிகளும், மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. இந்த அலுவலகங்களில் காலியாகவுள்ள 12 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கு முப்படைகளைச் சேர்ந்த அலுவலர்கள், முன்னாள் முப்படை அலுவலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

அவற்றில் தகுதியானவர்கள், உயர்நிலை தேர்வுக் குழுவால் நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட 12 உதவி இயக்குநர்களுக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்குவதன் அடையாளமாக ஏழு பேருக்கு உத்தரவுகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.