பள்ளி கல்வித்துறையில் தேர்ச்சி குறைவுக்கு என்ன காரணம் : கூட்டம் போட்டு கேள்வி கேட்கிறாங்க!

காரைக்குடி : கடந்த ஆண்டு 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம், ஆக.,13ல் கல்வி அமைச்சர் முன்னிலையில் நடக்கிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அமைச்சர், முதன்மை செயலாளர் தலைமையில் ஆய்வு கூட்டம் மண்டல அளவில் நடக்க உள்ளது.
இதில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 70 சதவீதத்துக்கு குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்களுடன், முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் பங்கேற்க வேண்டும். தேர்ச்சி விகிதம் அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். ஆக.,13ல்- வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட மண்டல அளவிலான கூட்டம் திருவள்ளூரில் துவங்குகிறது.
ஆக., 20ல் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை,விருதுநகர் மாவட்டங்களுக்கு திண்டுக்கல்லிலும்; செப்.,1ல் தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு தூத்துக்குடியிலும் ஆய்வு கூட்டம் நடக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.