பி.எட் - 'கிரேடு'க்கு இணையான மதிப்பெண் குறிப்பிட வேண்டும் துணைவேந்தர் தகவல் - தினமலர்

மதுரை:"பி.எட்., படிப்பிற்கு 'ஆன்--லைனில்' விண்ணப்பிக்கும் போது, 'கிரேடிங்' முறையிலுள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலையில் அதற்கான உரிய மதிப்பெண் பெற்று குறிப்பிட வேண்டும்," என, தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலை துணைவேந்தர் விஸ்வநாதன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அரசு மற்றும் உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை 'கவுன்சிலிங்' மூலம் நடக்கவுள்ளது.

இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும். முதல் முறையாக இந்தாண்டு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம். இதற்காக மாநிலம் முழுவதும் 29 ஒருங்கிணைப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மதுரையில் ஜஸ்டின், சிவகங்கையில் அழகப்பா கல்வியியல் கல்லுாரி, துாத்துக்குடி வ.உ.சி.,, நெல்லை செயின்ட் இக்னீசியஸ் கல்வியியல் கல்லுாரிகளின் மையங்களில் விண்ணப்பிக்கலாம். 'கிரேடு' முறையில் உள்ள மாணவர்கள், சம்மந்தப்பட்ட பல்கலையில் இருந்து உரிய மதிப்பெண் பெற்று, விண்ணப்பத்தில் குறிப்பிட்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும், என்றார்