தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க தடை சட்டசபையில் சட்ட முன்வடிவு தாக்கல்


சென்னை, ஜூலை.31-தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்குவதற்கு தடை செய்வதற்கான சட்ட முன்வடிவு சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சட்ட முன்வடிவுசட்டசபையில் நகராட்சி நிர்வாகம், ஊராக வளர்ச்சி, சட்டம்,
நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்ட முன்வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை வழங்குவதற்கு ஏதுவாக மாநிலத்தில் படிப்படியாக போதிய எண்ணிக்கையிலான அரசு சட்டக்கல்லூரிகளை நிறுவுவதற்கு அரசு கொள்கை முடிவொன்றினை எடுத்துள்ளது. பொருளாதாரம் மற்றும் சமுக ரீதியில் நலிவுற்ற பிரிவினர்களுக்கு தனியார் பொறுப்புக்கட்டளைகள், சங்கங்களால் குறைந்த செலவில் தரமான சட்டக்கல்வியை அளிக்க முடியவில்லை என்பதனையும், சட்டக்கல்லூரிகளை நல்ல முறையில் திறம்பட தொடர்ந்து நிர்வாகம் செய்ய முடியவில்லை என்பதனையும் கடந்த கால அனுபவங்கள் வெளிப்படுத்துகின்றன. தடைஎனவே, சட்டத்தை இயற்றுவதன் மூலம் மாநிலத்தில் தனியார் நபர்கள் சட்டக்கல்லூரிகள் நிறுவுவதை தடை செய்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்கு செயல் வடிவம் கொடுக்க விழைகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.