கும்பகோணம் பள்ளி தீவிபத்தில் 94 குழந்தைகள் கருகி பரிதாப சாவு தமிழகத்தை உலுக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு கைதான கல்வி இலாகா அதிகாரிகள் உள்பட 21 பேர் தஞ்சை கோர்ட்டில் ஆஜர்


தஞ்சாவூர், ஜூலை.30-94 பிஞ்சு குழந்தைகள் கருகி பலியான கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது.நாட்டை உலுக்கிய விபத்துதமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து 2004-ம் ஆண்டு ஜூலை 16-ந் தேதி நடந்தது.
அன்று நடைபெறப் போகும் அசம்பாவிதத்தை அறியாமல் வழக்கம்போல குழந்தைகளும், சிறுவர்களும் குதூகலமாக பள்ளிக்கு சென்றனர்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி தான் அது. இந்த பள்ளியில் அன்று மதிய உணவிற்காக சமையல் செய்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சமையல் அறையில் பிடித்த தீ, பள்ளி கட்டிடத்திற்கும் வேகமாக பரவியது. 94 குழந்தைகள் பலிபள்ளியின் மேல்மாடியில் இயங்கி வந்த கூரை வேயப்பட்ட வகுப்பறை கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. மாணவ-மாணவிகள் வேகமாக வெளியேற போதிய இடவசதியும் அங்கு இல்லை. இதனால் அந்த அறையில் இருந்த 94 குழந்தைகள் தப்ப முடியாமல் உடல் கருகி மடிந்தார்கள். 18 குழந்தைகள் பலத்த காயம் அடைந்து, தீவிர சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்தனர். தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்திய இந்த கொடூர விபத்து தொடர்பாக கும்பகோணம் கிழக்கு போலீசார் விசாரணை நடத்தினர். குறுகலான அந்த கட்டிடத்தில் ஸ்ரீ கிருஷ்ணா உதவிபெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி நர்சரி பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா மகளிர் உயர்நிலைப்பள்ளி என 3 பள்ளிகள் இயங்கி வந்தது. 3 பள்ளிகளிலும் சேர்த்து மொத்தம் 700 மாணவ-மாணவிகள் படித்துவந்தனர். அங்கு போதிய பாதுகாப்பு வசதியும், தீயணைப்பு கருவிகளும் இல்லாதது தெரியவந்தது.24 பேர் கைதுஅந்த பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிசாமி, பள்ளி தாளாளரான அவரது மனைவி சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி எம்.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பி.பழனிச்சாமி, ஆர்.பாலாஜி, மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.நாராயணசாமி, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், தாசில்தார் பரமசிவம், பொறியாளர் ஜெயசந்திரன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலட்சுமி, அந்தோணியம்மாள், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகரமைப்பு அலுவலர் முருகன், தொடக்கப்பள்ளி கல்வி இயக்குனர் கண்ணன் ஆகிய 24 பேரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.பல்வேறு பிரிவுகளில் வழக்குஅவர்கள் மீது 304 (கொலைக்கு இணையான மரணத்தை ஏற்படுத்துதல்), 120பி (சதிச்செயல்), 338 (உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கொடுங்காயங்கள் ஏற்படுத்துதல்) மற்றும் சிறுவர் நீதி சட்டம், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டம், மாநகராட்சி சட்டம் என பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதில் 488 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டனர். 3,126 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2006-ம் ஆண்டு இந்த வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.விசாரணை முடிந்ததுமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி எம்.பழனிசாமி, தாசில்தார் பரமசிவம், தொடக்கக்கல்வி இயக்குனர் கண்ணன் ஆகியோர் ஐகோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். தொடக்கக்கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.விபத்து நடந்து 8 ஆண்டுகளுக்கு பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு செப்டம்பர் 24-ந் தேதி வழக்கு விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் காயத்துடன் உயிர்தப்பிய குழந்தைகள், பலியான குழந்தைகளின் பெற்றோர், அப்போதைய கலெக்டர் ராதாகிருஷ்ணன் உள்பட 230 பேர் சாட்சியம் அளித்தனர்.அரசுதரப்பு சாட்சிகள் விசாரணை மார்ச் 28-ந் தேதி முடிவடைந்தது. பின்னர் இருதரப்பு வக்கீல்கள் வாதம் நடைபெற்றது. 22 மாதங்களாக நடைபெற்றுவந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 17-ந் தேதி முடிவடைந்தது. இன்று தீர்ப்புஇந்த கொடூர சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கில் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கப்படுகிறது. மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமது அலி தீர்ப்பை வழங்குகிறார். இந்ததீர்ப்பை நாடே பரபரப்புடன் எதிர்பார்த்து இருக்கிறது.இந்த விபத்தில் காயமடைந்து உயிர்தப்பிய குழந்தைகளின் தழும்புகளும் மறையவில்லை. உயிர்நீத்த குழந்தைகளின் நினைவுகளும் அவர்களது பெற்றோர் மனதில் இருந்து நீங்கவில்லை.இந்த தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கூறும்போது, ‘‘எங்கள் குழந்தைகள் இறந்தபோது தொலைந்துபோன எங்கள் சந்தோஷம் இதுவரை திரும்ப கிடைக்கவில்லை. தீ விபத்துக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த தீர்ப்பு, பாதுகாப்பு இல்லாமல் மோசமான பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்’’ என்றனர்.இன்று தீர்ப்பு கூறப்படுவதையொட்டி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் கல்வி அதிகாரிகள் உள்பட 21 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்கள். அதோடு தீர்ப்பை எதிர்பார்த்து ஏராளமானவர்களும் நீதிமன்றத்தில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்படுகிறது.