அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் என்ஜினீயர் பணிக்கான தேர்வு 50 சதவீதம் பேர் வரவில்லை


சென்னை, ஜூலை.28-அரசுப்பணியில் 98 என்ஜினீயர்களை நியமிப்பதற்கான தேர்வு சென்னை உள்பட 15 நகரங்களில் நேற்று நடைபெற்றது. இதில் 50 சதவீதம் பேர் பங்கேற்கவில்லை.என்ஜினீயர் பணியிடங்கள்பொதுப்பணித் துறையில் உள்ள நீர் வளத்துறைக்கு 50 சிவில் உதவி பொறியாளர்கள்,
கட்டிடப் பணிக்கு 21 சிவில் உதவி பொறியாளர்கள், 9 எலெக்ட்ரிக்கல் உதவி பொறியாளர்கள் மற்றும் தமிழ்நாடு தொழிற்சாலை துறையில் தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் பணிக்கு 18 பேர் என மொத்தம் 98 பணியிடங்களுக்கு நேற்று எழுத்துத் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. இந்த தேர்வு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் 15 நகரங்களில், 176 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் மட்டும் 50 மையங்களில் நடந்தது. இந்த தேர்வை கண்காணிக்கும் பணியில் 2 ஆயிரத்து 678 கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். 29 பறக்கும் படையினரும் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.விரைவில் முடிவுதேர்வு மையங்களான திருவல்லிக்கேணி என்.கே.டி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, லேடி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் (பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா ஆகியோர் பார்வையிட்டனர். நேற்று காலை விருப்ப பாடத்தேர்வும், மாலையில் பொது அறிவுக்கான தேர்வும் நடைபெற்றது. வெ.ஷோபனா கூறுகையில், இன்னும் ஒரு வாரத்தில் விடை வெளியிடப்படும் என்றும் எவ்வளவு விரைவாக முடிவு வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடுவோம் என்றார். 50 சதவீதம் பேர் வரவில்லைதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் 54 ஆயிரத்து 690 பேர். இவர்களில் தேர்வு எழுத தகுதி உடையவர்கள் 53 ஆயிரத்து 555 பேர். ஆனால் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை’ என்றார்.