கால்நடை மருத்துவப் படிப்புக்கு வரும் 30ம் தேதி முதல் கவுன்சலிங் நடைபெறும் என மருத்துவப் படிப்பு தேர்வுக்குழு தலைவர் மா.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவப் படிப்புக்கு வரும் 30ம் தேதி முதல் கவுன்சலிங் நடைபெறும் என மருத்துவப் படிப்பு தேர்வுக்குழு தலைவர் மா.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிகளில் 2014&15ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 19 ஆயிரத்து 746 விண்ணப்பங்கள் விற்பனையானது. இதில், பூர்த்தி செய்யப்பட்டு 18 ஆயிரத்து 698 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றில் 18 ஆயிரத்து 78 விண்ணப்பங்கள் தகுதியானவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் கால்நடை மருத்துவ படிப்பில் உள்ள இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை படிப்புக்கான கவுன்சலிங் நடைபெறும். அடுத்த மாதம் 1ம் தேதி பிடெக் (எப்டி) மற்றும் பிடெக் (பிபிடி) பிரிவுகளுக்கான கவுன்சலிங் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவப் படிப்பு தேர்வுக்குழு தலைவர் மா.திருநாவுக்கரசு கூறியதாவது:
இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை படிப்புக்கு தமிழகம் முழுவதும் 280 இடங்கள் உள்ளன. இதில் இந்திய கால்நடை மருத்துவ கவுன்சிலுக்கான 42 இடங்கள்(15 சதவீதம்) போக மீதமுள்ள 238 இடங்களுக்கு இம்மாதம் 30 மற்றும் 31ம் தேதிகளில் கவுன்சலிங் நடைபெறும். ஒரத்தநாடு, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 80 இடங்களுக்கு இந்த வருடம் கால்நடை மருத்துவ கவுன்சலிங் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிறப்பு ஒதுக்கீடு மற்றும் தொழில் பிரிவு மாணவர்களுக்கு 30ம் தேதியும், கலையியல் மாணவர்களுக்கு 31ம் தேதியும் கவுன்சலிங் நடைபெறும். மேலும், பி.டெக்(உணவு தொழில்நுட்பம்), பி.டெக்.(கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம்) ஆகிய படிப்புகளில் காலியாக உள்ள 20 இடங்களுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் 1ம் தேதி நடைபெறும். கட்ஆப் மதிப்பெண்ணை பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 197, இளங்கலை கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை படிப்பில், கலையியல் பிரிவு பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 197.75, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 197.00, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் மாணவர்களுக்கு 193.50, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 196.75 என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு 193, தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவினருக்கு 190, பழங்குடியினருக்கு 182.75, தொழில் பிரிவில் பொதுப்பிரிவினருக்கு 193, பி.டெக்.(உணவு தொழில்நுட்பம்) படிப்புக்கு பொதுப்பிரிவினருக்கு 195.75, பி.டெக்.(கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம்) படிப்புக்கு பொதுப்பிரிவினருக்கு 191.50 ஆகவும் கட்ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.