3 வாரத்திற்குள் 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் - அமைச்சர் தகவல்

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டசபையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.


கவன ஈர்ப்பு

சட்டசபையில் நேற்றைய கேள்வி நேரம் முடிந்ததும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலபாரதி (திண்டுக்கல் தொகுதி) கவன ஈர்ப்பு ஒன்றை கொண்டு வந்தார். அதாவது, 2013-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாது குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியதாவது:-

ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் படியும், 23-8-2010 நாளிட்ட தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் அறிவிக்கையின் அடிப்படையில் 1 முதல் 8 வகுப்பு வரை நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அரசு அதிகாரம் பெற்ற அமைப்பால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும், தேர்ச்சிக்குரிய தகுதி மதிப்பெண் 60 சதவீதம் இருக்க வேண்டும் எனவும் அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

துணை தகுதித்தேர்வு

அரசாணை நிலை எண் 181, நாள் 15-11-2011-ன்படி தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்தும் முகவாண்மையாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கப்பட்டு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் 12-7-2012 அன்று தகுதித்தேர்வை நடத்தியது, இதில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதியதில் 2 ஆயிரத்து 448 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 0.34 சதவீதம் ஆகும்.

தேர்ச்சி விகிதம் மிக குறைந்த அளவே இருந்ததால், ஆசிரியர் தேர்வு வாரியம் 14-10-2012 அன்று துணைத் தகுதித்தேர்வினை நடத்தியது. இதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதியதில், 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 2.99 சதவீதம் ஆகும். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதியுள்ளவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

5 சதவீதம் குறைப்பு

2013-ம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் தகுதித் தேர்வினை நடத்தியது. இதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேர்களில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு எழுதிய 4 லட்சத்து 311 பேரில் 16 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதற்கிடையில், முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையில், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை இடஒதுக்கீட்டு பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைத்து நிர்ணயம் செய்யப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு, அரசாணை நிலை எண் 25, பள்ளி கல்வித்துறை நாள் 6-2-2014-ல், 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைத்தும், ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முகமதியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய தேர்வர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண்கள் என நிர்ணயம் செய்தும் ஆணை வெளியிடப்பட்டது.

ஐகோர்ட்டில் வழக்கு

முதல்-அமைச்சர்ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட இச்சலுகையினால் 17-8-2013 மற்றும் 18-8-2013 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தாள் ஒன்றில், 17 ஆயிரத்து 996 பேர்களும், தாள் இரண்டில் 25 ஆயிரத்து 187 பேர்களும் ஆக மொத்தம் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றிருந்த 29 ஆயிரத்து 518 பேர்களுடன் கூடுதலாக தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 183 பேர்கள் ஆக மொத்தம் 72 ஆயிரத்து 701 பேர்களின் கல்விச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்ல என பணிநாடுநர்களால் சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைகளில் வழக்குகள் தொடரப்பட்டன.

தொடர் நடவடிக்கை

அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்பப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு மற்றும் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை ஆகிய நீதிமன்றங்களில் இவ்வழக்குகள் முடிவுற்ற நிலையில், தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடர் நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

தொடர்ந்துபேசிய உறுப்பினர் பாலபாரதி, ‘‘முதல்- அமைச்சர் ஜெயலலிதா தேர்ச்சி சதவீதத்தில் 5 சதவீதம் தளர்வு அளித்த பிறகு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. 72 ஆயிரத்து 701 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், 10 ஆயிரம் காலி பணியிடங்களைத்தான் அரசு அறிவித்துள்ளது. இந்த சூழலில் நீதிமன்றம் வெயிட்டேஜ் அடிப்படையில் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது. வெயிட்டேஜ் என்று வரும்போது அதில் பிளஸ்-2 மதிப்பெண்ணும் சேர்க்கப்படுகிறது. நாம் அப்போது படிக்கும்போது பிளஸ்-2-வில் மாவட்டத்திற்கு ஒருவர் தான் அதிக மதிப்பெண் பெறுவார்கள். ஆனால் இப்போது 200-க்கும் மேற்பட்டோர் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள். எனவே, பிளஸ்-2 மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது’’ என்றார்.

எவ்வளவு காலியிடம்?

அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசும்போது, ‘‘அரசின் விதிமுறையை மாற்றும் கோரிக்கையை உறுப்பினர் இங்கே வைக்கிறார். இதுகுறித்து முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக 80 வழக்குகள் போடப்பட்டிருந்தன. அனைத்து வழக்குகளும் அரசுக்கு சாதகமாக முடிந்துள்ளது. வழக்குகளின் நகல்கள் பெறப்பட்டவுடன், இன்னும் 2 அல்லது 3 வாரங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணியில் அமர்த்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது’’ என்றார்.

இதுகுறித்து, கல்வித்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வரும் 30-ந் தேதிக்குள் இடைநிலை ஆசிரியர்களுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடப்படும். இன்னும் 3 வாரத்திற்குள் சுமார் 15 ஆயிரம் ஆசிரியர்கள் தமிழகத்தில் நியமனம் செய்யப்படுவார்கள்’’என்றார்.