தெலுங்கானாவில் ஆளில்லா ரெயில்வே கேட்டில் பள்ளிக்கூட பஸ் மீது ரெயில் மோதி 16 பேர் பலி 3 முதல் 7 வயதிலான மாணவர்கள் நசுங்கி செத்த பரிதாபம்


நகரி, ஜூலை.25-தெலுங்கானா மாநிலத்தில் ஆள் இல்லாத ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளிக் கூட பஸ் மீது ரெயில் மோதி 14 மாணவர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள்.
பலியான மாணவர்கள் 3 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது.பள்ளிக்கூட பஸ்தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள தூப்ரான் என்ற இடத்தில் காக்கதீய எஜுகேஷனல் வெல்பேர் சொசைட்டிக்கு சொந்தமான காக்கதீய உயர்நிலைப் பள்ளி உள்ளது. சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான பஸ்சில் அழைத்து வருவது வழக்கம்.அதுபோல நேற்று காலை 8.43 மணிக்கு அந்த பகுதி மாணவ-மாணவிகள் 38 பேர் மற்றும் டிரைவர், கிளீனருடன் பள்ளிக்கூட பஸ் இஸ்லாம்பூர் என்ற இடத்தில் இருந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தது. வழியில் மேடக் மாவட்டம் மாசாயிபேட்டை என்ற இடத்தில் உள்ள ஆள் இல்லாத ரெயில்வே கிராசிங்கை கடக்க முயன்றது.16 பேர் பலிஅப்போது மராட்டிய மாநிலம் நாந்தேடில் இருந்து செகந்திராபாத் செல்லும் நாந்தேடு பயணிகள் ரெயில் அங்கு வந்து கொண்டிருந்தது. பள்ளி பஸ் டிரைவர் ரெயில் வருவதை கவனிக்கவில்லை. தண்டவாளம் அருகே சென்றபோது தான் அவர் ரெயில் வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே ரெயில் வருவதற்குள் வேகமாக தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஆனால் அதற்குள் ரெயில் அந்த பஸ் மீது மோதிவிட்டது.ரெயில் மோதிய வேகத்தில் பஸ் ஒரு கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு உருக்குலைந்து போனது. இதில் பஸ்சில் இருந்த 13 பேர் அந்த இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் டிரைவர், கிளீனர் உள்பட 3 பேர் பலியானார்கள். பலியானவர்களில் மாணவர்கள் 8 பேர், மாணவிகள் 6 பேர். இவர்கள் 3 முதல் 7 வயதுக்குட்பட்டவர்கள். பலர் கவலைக்கிடம்விபத்து நடந்த உடனேயே அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் காயமடைந்த மாணவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ரெயில் தண்டவாளம் அருகில் உடல் சிதறி இறந்து கிடந்த குழந்தைகளின் உடல்களையும், துண்டிக்கப்பட்ட உறுப்புகளையும் வரிசையாக வைத்திருந்தது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.தகவல் கிடைத்து போலீசார், ரெயில்வே அதிகாரிகள், மருத்துவ குழுவினர் ஆகியோரும் அங்கு விரைந்தனர். மாணவர்களின் பெற்றோரும் தகவல் கிடைத்து அந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் 4 மாணவர்கள் மட்டுமே லேசான காயத்துடன் தப்பினர். மற்ற அனைவரும் படுகாயமடைந்து ஐதராபாத்தில் உள்ள யசோதா ஆஸ்பத்திரியில் 20 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.ரூ.5 லட்சம் உதவிவிபத்து பற்றி தகவல் அறிந்ததும், மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர். விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்தனர். காயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றும் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகளை முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ் பார்த்து ஆறுதல் கூறினார்.தலைவர்கள் ஆறுதல்தென்மத்திய ரெயில்வே பொது மேலாளர் பி.கே.ஸ்ரீவஸ்தவாவிடம் இந்த விபத்து குறித்து தனது கோபத்தையும், அதிருப்தியையும் முதல்-மந்திரி வெளிப்படுத்தினார். ஒரு வார காலத்திற்குள் அனைத்து ஆள் இல்லாத ரெயில்வே கிராசிங்கிலும் கேட் அமைக்கப்பட்டு ஆட்களை நியமிப்பதாக பொது மேலாளர் முதல்-மந்திரியிடம் உறுதி அளித்தார்.விபத்து நடந்த இடத்திற்கு முதல்-மந்திரியின் மருமகனும், மந்திரியுமான ஹரீஷ் ராவ் உள்பட பல மந்திரிகள் விரைந்தனர். பலியான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, மாநில பாரதீய ஜனதா தலைவர் கிஷன் ரெட்டி, காங்கிரஸ் முன்னாள் மந்திரி கீதா ரெட்டி, மாநில காங்கிரஸ் தலைவர் பொன்னல லட்சுமய்யா ஆகியோரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். நடிகர் பவன் கல்யாண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகளை பார்த்து ஆறுதல் கூறினார்.மக்கள் ஆர்ப்பாட்டம்விபத்து நடந்த இடத்தில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகம் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் ரெயில்வே கேட் அமைக்க பலமுறை வலியுறுத்தியும் அமைக்காததற்கு கண்டனம் தெரிவித்தனர்.போலீசாரின் வாகனங்கள், உடல்களை ஏற்றிச்செல்ல வந்த ஆம்புலன்சுகள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் போலீசார் லேசான தடியடி நடத்தி கட்டுப்படுத்தினர்.தந்தைக்கு மாரடைப்புபலியானவர்களில் ரஜியா, வஜீத் என்ற 2 பேர் அக்கா, தம்பி. இவர்களின் தந்தை ரஷீத் விபத்து நடந்த இடத்துக்கு வந்து தனது குழந்தைகளின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சரிந்து விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேலும் ஒரே குடும்பங்களை சேர்ந்த சரண், திவ்யா, வித்யா என்ற அண்ணன்-தங்கைகள், வருண், சுருதி என்ற அண்ணன்- தங்கையும் இதில் பலியாகி விட்டனர்.டிராக்டர் டிரைவர்விபத்துக்குள்ளான அந்த பள்ளி பஸ்சை வழக்கமாக பாலய்யா என்ற டிரைவர் தான் ஓட்டிச் செல்வார். அவர் நேற்று வேலைக்கு வராததால் பிட்சாபதி என்பவர் அந்த பஸ்சை நேற்று ஓட்டிச் சென்றார். அவர் டிராக்டர் டிரைவர் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி வழக்கமாக அந்த பஸ் வேறு வழியில் தான் செல்லும். அந்த வழியில் 2 ரெயில்வே கேட்டுகள் ஆட்களுடன் உள்ளது. அது சற்று தூரமான பாதை. ஆனால் பிட்சாபதி ஆளில்லாத ரெயில்வே கேட் வழியாக குறுக்கு பாதையில் சென்றிருக்கிறார்.அதேபோல நாந்தேடில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய நாந்தேடு பயணிகள் ரெயில் 4 மணி 40 நிமிடங்கள் தாமதமாக அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு, காலை 8.43 மணிக்கு மாசாயிபேட்டைக்கு வந்தது. ரெயில் சரியான நேரத்துக்கு புறப்பட்டிருந்தாலோ அல்லது வழக்கமான டிரைவர் வந்திருந்தாலோ இந்த விபத்து தவிர்க்கப்பட்டு இருக்கலாம்.பள்ளி லைசென்ஸ் ரத்துஇந்த விபத்து குறித்து ஆர்.டி.ஓ. வனஜா தேவி விசாரணை நடத்தி வருகிறார். மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திரா அந்த காக்கதீய பள்ளி அனுமதியை ரத்து செய்துள்ளார்.விபத்து நடந்த அதே இடத்தில் இதற்கு முன்னரும் 4 முறை விபத்துகள் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.