TET - CASE AGAINST NEW GO

மதுரை: இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் அரசாணையை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. புதுக்கோட்டை பிரபாகர் தாக்கல் செய்த
மனு: எம்.எஸ்.சி.,- எம்.எட்., படித்துள்ளேன். தனியார் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிகிறேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் (2013) 84 மதிப்பெண் பெற்றேன். பள்ளிக் கல்வித்துறை,' இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது பிளஸ் 2 மதிப்பெண்ணிற்கு 10, பட்டப்படிப்பு 15, பி.எட்.,15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (டீ..டீ.,) 60 என மொத்தம் 100 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,' என மே 30 ல் உத்தரவிட்டது. இதனால், 10 ஆண்டுகளுக்கு முன் பிளஸ் 2 தேர்ச்சியடைந்தவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2 பாடத்திட்டத்தில் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 வில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. மதிப்பெண் வழங்கும் முறையில் வேறுபாடு உள்ளது. உயிரியல், தொழிற்கல்வி பாடப் பிரிவுகளில், மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படுகிறது. பொருளாதாரம், வணிகவியல் பாடப் பிரிவுகளில் செய்முறைத் தேர்வு இல்லை. பட்டப் படிப்புகளுக்கு பல்வேறு பல்கலைகளில், மதிப்பெண் கணக்கிடுவதில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறது. தன்னாட்சிக் கல்லூரிகளிலும் இதே நிலை தான். பி.எட்., செய்முறைத் தேர்விற்கு மதிப்பெண் வழங்குவதில், ஒவ்வொரு பல்கலையிலும் வெவ்வேறு நடைமுறைகள் உள்ளன. முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தின்போது, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவத்திற்கு 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், இந்நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. பாரபட்சம் காட்டப்படுகிறது. பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமை, கற்பித்தல் அனுபவ அடிப்படையில் 'வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கி, நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார். பள்ளிக் கல்வி செயலாளர், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவிட்டார்.