அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்' பட்டியலை, நேற்று வெளியிட்டது.

சென்னை: அண்ணா பல்கலை, பி.இ., 'ரேங்க்' பட்டியலை, நேற்று வெளியிட்டது. கடந்த ஆண்டு, வெறும், 11 பேர் மட்டும், 'கட்-ஆப்' மதிப்பெண், 200க்கு, 200 பெற்ற நிலையில், இந்த ஆண்டு, 271 பேர், 200க்கு, 200 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தனர்.


பி.இ.,- பி.டெக்., படிப்புகளில் சேர, 1.73 லட்சம் மாணவர்கள், அண்ணா பல்கலையில் விண்ணப்பித்தனர். இவர்களுக்கான, கட்-ஆப் மதிப்பெண், ரேங்க் பட்டியல், நேற்று காலை வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர், பழனியப்பன், ரேங்க் பட்டியலை வெளியிட்டார்.

ரைமண்ட் கூறுவது என்ன?
அப்போது, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது:இந்த ஆண்டு, கட்-ஆப் மதிப்பெண்ணான, 200க்கு, 200 மதிப்பெண்ணை, 271 மாணவர்கள் பெற்றுள்ளனர். கட்-ஆப் மதிப்பெண், கணித மதிப்பெண், இயற்பியல் மதிப்பெண், நான்காவது பாட மதிப்பெண், பிறந்த தேதி ஆகிய அனைத்திலும், 'டை' ஆகும் மாணவர்களுக்கு, ரேண்டம் எண் பயன்படுத்தப்படுகிறது. இந்த, ரேண்டம் எண், கடந்த, 11ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு, 124 மாணவர்களுக்கு, ரேண்டம் எண் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, 24 மாணவர்களுக்கு மட்டும், ரேண்டம் எண் பயன்படுத்தினோம். இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் நான்காவது பாடம் ஆகிய நான்கிலும் சேர்த்து, 100 பேர், 200க்கு, 200 பெற்றுள்ளனர். 171 மாணவர்கள், இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில், 200க்கு, 200 பெற்றுள்ளனர்.

5,000 மாணவர்கள்
பொது கலந்தாய்வு, வரும், 27ம் தேதி துவங்கி, ஜூலை, 28ம் தேதி வரை நடக்கிறது. கட் - ஆப் மதிப்பெண் வாரியாக, கலந்தாய்வு நடக்கும் தேதி, பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதை, அண்ணா பல்கலையின் இணைய தளத்தில் (www.annauniv.edu) பார்க்கலாம்.நாள்தோறும், 5,000 மாணவர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர்.அனைத்து மாணவர்களுக்கும், கலந்தாய்வு குறித்த தகவல், எஸ்.எம்.எஸ்., மூலமாக தெரிவிக்கப்படும். கலந்தாய்வுக்கு, மூன்று நாள் முன்னதாக, இந்த தகவல் தெரிவிக்கப்படும்; கடிதங்களும் அனுப்பப்படும்.ஆகஸ்ட், 1ம் தேதி, பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும்; அதற்கு தகுந்தாற்போல், கலந்தாய்வு அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு, 11 பேர், 200க்கு, 200 பெற்றனர். இந்த ஆண்டு, 271 பேர், 200க்கு, 200 பெற்று விட்டனர். இதனால், ரேண்டம் எண் பயன்பாடும் அதிகரித்து உள்ளது.இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித்துறை முதன்மை செயலர், ஹேமந்த்குமார் சின்கா, இணை செயலர், உமா மகேஸ்வரி, பல்கலை துணைவேந்தர், ராஜாராம், பதிவாளர், கணேசன் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

5,264 விண்ணப்பங்கள் நிராகரிப்பு
பி.இ., படிப்பில் சேர, 1,73,687 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இவர்களில், 1,68,423 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 5,264 விண்ணப்பங்களை, அண்ணா பல்கலை நிராகரித்துள்ளது.

இது குறித்து, ரைமண்ட் கூறியதாவது:தேவையான சான்றிதழ்களை, இணைக்க மறந்திருப்பர்.நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விவரம், நிராகரித்ததற்கான காரணம் ஆகியவற்றை குறிப்பிட்டு, இணையதளத்தில் வெளியிட்டு உள்ளோம். அதை பார்த்து, உரிய சான்றிதழ்களை, உடனடியாக அண்ணா பல்கலையில் சமர்ப்பித்தால், விண்ணப்பம் ஏற்கப்படும். கலந்தாய்வுக்கு, சில தினங்கள் முன் வரை, குறைகளை நிவர்த்தி செய்யலாம்.இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்தார்.

'கட் - ஆப்' மதிப்பெண் 77.50 வரை அழைப்பு:
பெரும்பான்மை மாணவர்கள் பங்கேற்கும் பொதுப்பிரிவு கலந்தாய்வு, வரும், 27ம் தேதி துவங்கி, ஜூலை, 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், கட் - ஆப் மதிப்பெண், 200ல் துவங்கி, கடைசி நாளான, ஜூலை, 28ம் தேதி, கட் - ஆப் மதிப்பெண், 77.50 பெற்ற மாணவர்கள் வரை, இறுதிசுற்று கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.