நீர்நிலைகளுக்கு உரிய பாதுகாப்பின்றி மாணவர்கள் செல்லக் கூடாது: பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை

மாணவர்கள், நீர்நிலைகளுக்கு உரிய
பாதுகாப்பின்றி செல்லக் கூடாது என
அறிவுறுத்துமாறு பள்ளித்
தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர்
வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்
ஒரு சுற்றறிக்கையை செவ்வாய்க்கிழமை
அனுப்பியுள்ளார்.
அதன் விவரம்:
தமிழகத்தில் இப்போது மாவட்டங்களில்
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழையினால்
பள்ளி மாணவ,
மாணவியருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம்
பாதுகாப்புடன்
செயல்படுமாறு தலைமையாசிரியர்களுக்கு
கீழ்க்கண்ட அறிவுரைகளை மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் நீர் தேக்கப் பள்ளங்கள்,
திறந்தவெளி கிணறுகள் இருந்தால்
அவற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்
தேக்கத் தொட்டி, கழிவு நீர்
தொட்டி ஆகியவை மூடப்பட்ட நிலையில்
உள்ளதை அவ்வப்போது உறுதிசெய்ய வேண்டும்.
மழை நேரங்களில் இடி, மின்னல்
வரும்போது மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்கக்
கூடாது என அறிவுறுத்த வேண்டும். சாலைகளில்
மழை நீர் கால்வாய் அருகே செல்வதைத்
தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
பள்ளி நேரம் முடிந்த பிறகு அனைத்து மாணவர்களும்
பள்ளியை விட்டுச் சென்றுவிட்டனர்
என்பதை உறுதி செய்த பிறகே வகுப்பறை மற்றும்
பள்ளியைப் பூட்ட வேண்டும்.
பள்ளிக்கு அருகில் மாணவர்கள் பாதுகாப்பாக
சாலையைக் கடப்பதற்கு ஒவ்வொரு நாளும்
ஒரு பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் மின் இணைப்புகள், சுவிட்சுகள்
ஆகியவை சரியாக உள்ளதை உறுதிப்படுத்த வேண்டும்.
மாணவர்களைக் கொண்டு மின்
சாதனங்களை இயக்குவதைத் தவிர்க்க வேண்டும்.
விழும் நிலையில் உள்ள மரங்கள், புதற்கள் ஏதேனும்
இருந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்த
வேண்டும்.
பள்ளிகளில் முதலுதவி செய்யும் வகையில்
அனைத்து மருத்துவப் பொருள்கள் அடங்கிய
முதலுதவிப் பெட்டி இருக்க வேண்டும்.
தீயணைப்பு சாதனங்களும் பள்ளியில் எப்போதும்
தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என அந்த
சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.