495 பொறியியல் கல்லூரிகளின் தர வரிசை: அண்ணா பல்கலை அறிவிப்பு

கடந்த, 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், 495 பொறியியல் கல்லூரிகளில் நடந்த
பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின்
அடிப்படையில், தர வரிசை பட்டியலை,
அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.


பொறியியல் கல்லூரிகளின் தர நிலவரம்
தெரியாமல், கலந்தாய்வில்,
கல்லூரியை தேர்வு செய்ய வேண்டிய
நிலையை சுட்டிக்காட்டி,
சென்னை உயர் நீதிமன்றத்தில், பொதுநல
வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்,
பொறியியல் கல்லூரிகளின்,
தேர்ச்சி சதவீத அடிப்படையில்,
கல்லூரிகளின் தர
வரிசை பட்டியலை வெளியிட,
அண்ணா பல்கலைக்கு, உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டது. இதனடிப்படையில், 2012
மற்றும் 13ல், அரசு பொறியியல்
கல்லூரிகள், சுயநிதி பொறியியல்
கல்லூரிகள் என, 495, கல்லூரிகளில் நடந்த
பல்வேறு, 'செமஸ்டர்' தேர்வுகளின்,
தேர்ச்சி அடிப்படையில், தர
வரிசை பட்டியலை, அண்ணா பல்கலை,
நேற்று, தன் இணையதளத்தில்
(www.annavuiv.edu) வெளியிட்டது.
அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும்,
நான்கு கல்லூரிகள் மற்றும்
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற, 28
பொறியியல் கல்லூரிகள் விவரம்,
பட்டியலில் சேர்க்கப்படவில்லை. 'இந்த
கல்லூரிகளை, தர வரிசை பட்டியலில்
சேர்க்க, உயர் நீதிமன்றம்
உத்தரவிடப்படாததால், சேர்க்கவில்லை'
என, பல்கலை வட்டாரம் தெரிவித்தது.
ஒரே பெயர் கொண்ட கல்லூரிகளின்
பெயர் பட்டியலும்,
அண்ணா பல்கலை இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளது. அகர
வரிசைப்படி, கல்லூரிகளின் பெயர்கள்
இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து, அண்ணா பல்கலை,
தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்,
வெங்கடேசன் கூறியதாவது:
இரு ஆண்டுகளிலும், இறுதி, 'செமஸ்டர்'
தேர்வு அடிப்படையில், தர
வரிசை பட்டியல் வெளியிடவில்லை.
2012, நவம்பர், டிசம்பரில் நடந்த, 1, 3, 5, 7
ஆகிய, 'செமஸ்டர்' தேர்வு முடிவுகளின்
அடிப்படையிலும், 2013ல், 2, 4, 6, 8 ஆகிய,
'செமஸ்டர்' தேர்வு முடிவுகளின்
அடிப்படையிலும், தர வரிசை பட்டியல்
வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்
தெரிவித்தார்.
அடையாளம் காண உதவும்:
ஒவ்வொரு கல்லூரியின், வெறும்
தேர்ச்சி சதவீதத்தை மட்டும் கணக்கிடாமல்,
அந்த கல்லூரியின்,
உள்கட்டமைப்பு வசதிகள், தகுதியான
ஆசிரியர்கள், ஆய்வக வசதிகள்,
பணி நியமனத்திற்கான நடவடிக்கைகள்
உள்ளிட்ட, அனைத்து அம்சங்களையும்
ஆய்வு செய்து, அதனடிப்படையில், தர
வரிசை பட்டியலை வெளியிட்டால்
மட்டுமே, மாணவர்களுக்கு பலன்
கிடைக்கும். நேற்று வெளியான
பட்டியல், அனைத்து அம்சங்களையும்
உள்ளடக்கியது இல்லை என்பதால்,
மாணவர்களுக்கு, பெரிய அளவில், பயன்
கிடைக்குமா என்பது கேள்விக்குறி
தான். எனினும், ஓரளவிற்கு, நல்ல
கல்லூரியை அடையாளம் காண, இந்த
பட்டியல் உதவும்.