பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு தொடங்கியது

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டுப் பணிகள் திருச்சியில் உள்ள இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை தொடங்கின.



இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் அதிகபட்சமாக உயிரியல் பாடத்தில் 800 மாணவர்கள் மறுமதிப்பீடு கோரியுள்ளனர். இதற்கடுத்ததாக வேதியியல், இயற்பியல், கணிதம் ஆகிய பாடங்களில் மாணவர்கள் மறுமதிப்பீடு கோரியுள்ளதாகத் தெரிகிறது. வழக்கமாக, சென்னையில் விடைத்தாள் நகல் எடுக்கும் முகாமில் மறுமதிப்பீட்டுப் பணிகளும் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு அரசுத் தேர்வுகள் துறை அதிரடியாக மறுமதிப்பீட்டுப் பணிகளை திருச்சிக்கு மாற்றியுள்ளது. இந்த மாற்றத்துக்கு குறிப்பிட்ட காரணம் இல்லையென்றாலும், புதிய ஆசிரியர்களைக் கொண்டு மறுமதிப்பீட்டுப் பணிகளை மேற்கொள்ள தேர்வுத்துறை முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தப் பணியில் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடைத்தாள் மறுமதிப்பீட்டுப் பணிகள் அடுத்த இரண்டு நாள்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விடைத்தாள் மறுமதிப்பீடு நிறைவடைந்த பிறகு, ஜூன் 15-ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும். அதோடு, திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலும் சி.டி.க்களில் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு, பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு ஆகியவற்றுக்கு அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன