பொறியியல் கவுன்சலிங் தொடக்கம் | பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் 23.06.2014 திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

பொறியியல் படிப்பில் சேருவதற்கான கவுன்சலிங் 23.06.2014 திங்கள்கிழமை தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சலிங் நடத்தப்படுகிறது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்பட சுமார் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் இந்த ஆண்டு பொது கவுன்சலிங் மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஒரு லட்சத்து 73 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியல் கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது. விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மறுநாள் (17-ம் தேதி) வெளியானது. இந்நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. முதல் 2 நாட்கள் (திங்கள், செவ்வாய்) விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கவுன்சலிங் நடக்கிறது. இதில் அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.ராஜாராம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்க உள்ளதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். மாற்றுத் திறனாளிகளுக்கான கவுன்ச லிங் 25-ம் தேதி நடைபெறுகிறது. பொது கவுன்சலிங் (அகடமிக்) ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 28-ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற உள்ளது. கவுன்சலிங் இன்று தொடங்குவதையொட்டி, அண்ணா பல்கலைக்கழகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வெளியூர் மாணவர்கள், துணைக்கு வரும் பெற்றோர் ஓய்வெடுக்க பிரம்மாண்டமான கூடாரம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.