பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் கவுண்ட்டவுன் தொடக்கம்

5 வெளிநாட்டு செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் நாளை (திங்கட்கிழமை) விண்ணில் ஏவப்படுவதையொட்டி ராக்கெட் கவுண்ட்டவுன் நேற்று தொடங்கியது. 

பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் இந்திய விண்வெளி ஆய்வு கழகமான இஸ்ரோ, இந்திய செயற்கைகோள்களை மட்டுமல்லாமல், வெளிநாட்டு செயற்கைகோள்களையும் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திவருகிறது. அந்த வகையில், 25 முறை பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, நாளை (திங்கட்கிழமை) பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதில், 5 வெளிநாட்டு செயற்கைகோள்கள் அனுப்பப்பட உள்ளன. 5 வெளிநாட்டு செயற்கைகோள்பூமியை ஆய்வு செய்ய பிரான்ஸ் நாடு அனுப்பும் ஸ்பாட்-7 என்ற செயற்கைகோள் 714 கிலோ எடை கொண்டது. ஜெர்மனி நாட்டின் 14 கிலோ எடை கொண்ட ஐசாட், கனடா நாட்டின் 15 கிலோ எடையுள்ள என்.எல்.எஸ்., பாயிண்ட்-1, சிங்கப்பூரின் 7 கிலோ எடை கொண்ட வெலாக்ஸ்-1 ஆகிய 4 வர்த்தக செயற்கைகோள்களும் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட்டில் அனுப்பப்பட உள்ளன. 5 வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்துவதற்கான ஒப்பந்தங்களை இஸ்ரோவின் வர்த்தக பிரிவான ‘ஆன்ட்ரிக்ஸ்’ மேற்கொண்டுள்ளது. தற்போது, 5 செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் முடிவடைந்து, இறுதிக்கட்ட சோதனை நடந்து வருகிறது. கவுண்ட்டவுன் தொடக்கம்பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து இஸ்ரோவின் திட்ட ஆயத்த சீராய்வுக் குழுவும், ஏவுதல் ஒப்புதல் வாரியமும் இணைந்து கடந்த 27-ந் தேதி ஆலோசனை நடத்தியது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை 8.49 மணிக்கு ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 49 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. நரேந்திர மோடி பங்கேற்பு நாளை (திங்கட்கிழமை) காலை 9.49 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்ததை 3 நிமிடங்கள் தாமதமாக 9.52 மணிக்கு ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ள உள்ளார். இதற்காக டெல்லியிலிருந்து தனிவிமானத்தில் புறப்பட்டு இன்று மாலை 3.30 மணி அளவில் பிரதமர் சென்னை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது.தற்போது மத்தியில் புதிய அரசாக பா.ஜ.க. பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருப்பதால், இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக டெல்லி, பெங்களூரில் இருந்து குண்டுதுளைக்காத 2 ஹெலிகாப்டர்களும் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளன. இதன் மூலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் சென்று பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்வையிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி, சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.