பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு 3,000 பேர் மறுகூட்டலுக்கு 600 பேர் விண்ணப்பம்

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி இந்த ஆண்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.


மறுகூட்டல் கோரி 600 மாணவர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர்.
பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) முதல் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு விடைத்தாளையும் மூன்று மூத்த ஆசிரியர்கள் கொண்ட குழு மறு மதிப்பீடு செய்யும் என அவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் நகல் கோரி 79,953 மாணவர்கள் விண்ணப்பித்தனர். மறுகூட்டலுக்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். விடைத்தாள் நகல்கள் ஸ்கேன் எடுக்கப்பட்டு இணையதளத்தில் ஜூன் 5-ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டன. விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிக்க ஜூன் 9-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந் நிலையில், மறுமதிப்பீடு கோரி இந்த ஆண்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களும், மறுமதிப்பீடு கோரி 600 மாணவர்களும் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுமையான எண்ணிக்கை விவரங்கள் செவ்வாய்க்கிழமை தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடைத்தாள்கள் அடுத்த சில நாள்களில் மறுமதிப்பீடு செய்யப்பட்டுவிடும். மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு, அதைவிட குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.