'கடை கடையாக' அலையும் பெற்றோர்:பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தட்டுப்பாடு

பிளஸ் 1 பாடப் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்களின் பெற்றோர் கடை கடையாக ஏறி இறங்கி அலைந்து வருகின்றனர்.ஜூன் 16 முதல் பிளஸ் 1 வகுப்புகள் துவங்கின. வகுப்புகள் துவங்கிய நாளிலேயே அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களும் வழங்க கல்வித் துறை நடவடிக்கை எடுத்தது.


அதாவது, ஒவ்வொரு அரசு பள்ளியிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கையை ஒப்பிட்டு அதில் இருந்து 10 சதவீதம் அதிகம் வைத்து, பிளஸ் 1 புத்தகங்களின் தேவையை முதற்கட்டமாக அதிகாரிகளுக்கு தெரிவிப்பர். இதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு பாடநுால் நிறுவனத்தில் இருந்து புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும். ஆனால், இந்தாண்டு பிளஸ் 1ல் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருந்ததால் 30 சதவீதம் மாணவர்களுக்கு இதுவரை புத்தகங்களே வழங்கப்படவில்லை.இதனால், மாணவர்களுக்கான புத்தகங்கள் தேவை குறித்து மீண்டும் ஒரு பட்டியலை கல்வித்துறைக்கு பள்ளிகள் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அரசு பள்ளிகள் நிலை இப்படியென்றால், மெட்ரிக் பள்ளிகள் குறித்து கேட்கவே வேண்டாம். பெரும்பாலான பள்ளிகள் ஜூன் 4ல் துவங்கிவிட்டன. ஆனால் பாடப்புத்தகங்கள் இன்னும் கிடைத்தபாடில்லை என பெற்றோர் புலம்புகின்றனர். இவற்றில், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல் புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
மதுரை புதுமண்டபத்தில் உள்ள புத்தக கடைகளில் பெற்றோர் ஏராளமானோர் நேற்று பிளஸ் 1 புத்தகங்கள் கேட்டு கடை கடையாக ஏறி இறங்கியும், மொத்த புத்தகங்கள் (செட்) எங்கும் கிடைக்கவில்லை.

மதுரையை சேர்ந்த சேனாதிராஜன் கூறியதாவது:எனது மகள் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 1 சேர்த்துள்ளார். ஜூன் 4ல் பள்ளி துவங்கியது. 'பயோ கணிதம்' பாடப் புத்தகங்கள் இதுவரை கிடைத்தபாடில்லை. ஒருசில கடைகளில் கிடைத்தாலும், புத்தகங்களுக்கான அனைத்து 'நோட்ஸ்'களும் வாங்க வற்புறுத்துகின்றனர். புத்தக 'செட்' விலை ரூ.240க்குள். ஆனால், 'நோட்ஸ்'கள் விலை ரூ.ஆயிரத்தை தாண்டி விடுகிறது. எளிதில் புத்தகங்கள் கிடைக்க வழி செய்ய வேண்டும், என்றார்.

புத்தக கடை விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "'செட்' புத்தகங்கள் அதிகம் வருவதில்லை. சில புத்தகங்கள் பற்றாக்குறை இருப்பது உண்மை தான். அடுத்தாண்டு பாடத் திட்டங்கள் மாறும் என கூறுவதால் யாரும் புத்தகங்களை மொத்தமாக வாங்கி வைக்க முன்வருவதில்லை," என்றார்.மதுரையில் உள்ள தமிழ்நாடு பாடநுால் கல்வியல் பணிகள் கழகம் அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்கப்பட்டன. மேலும் தேவைப்படும் புத்தகங்களையும் வழங்க தயாராக உள்ளோம்.

மெட்ரிக் பள்ளிகளுக்கும் தொடர்ந்து புத்தகங்கள் அனுப்பி கொண்டு தான் உள்ளோம். பல பள்ளிகள் உரிய 'டிடி'க்களை வழங்காததால் அப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. மேலும், பிளஸ் 1 வகுப்புகள் துவங்கி சில நாட்கள் தான் ஆகின்றன. 48 பாடப்பிரிவுகளில் புத்தகங்கள் வழங்க வேண்டியுள்ளன. விரைவில், மாணவர்களுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.