ஜூன் 14-இல் எம்.பி.பி.எஸ். தரவரிசைப் பட்டியல்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) மாணவர்களைச் சேர்க்க சென்னையில் வரும் சனிக்கிழமை (ஜூன் 14) தரவரிசைப் பட்டியலை வெளியிட மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.



மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ள பிளஸ் 2 மாணவர்களின் திருத்தப்பட்ட மதிப்பெண்ணை பள்ளிக் கல்வித் துறை அளித்தவுடன், தரவரிசைப் பட்டியலை முழுமையாக தயாரிக்க மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது. இதனால்தான் தரவரிசைப் பட்டியலை வரும் 14-ஆம் தேதி வெளியிட அது முடிவு செய்துள்ளது.
2,172 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பிக்கும் 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றில் சேர இந்த ஆண்டு மொத்தம் 27,907 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு கடந்த ஜூன் 2-ஆம் தேதி முடிவடைந்தது.
"ரேண்டம் எண்' ஒதுக்கீடு: எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள 27,907 மாணவர்களுக்கும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு செயலர் அலுவலகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி முன்னிலையில் கம்ப்யூட்டர் மூலம் 10 இலக்க
"ரேண்டம் எண்' (சம வாய்ப்பு எண்) திங்கள்கிழமை (ஜூன் 9) வழங்கப்பட்டது. இவ்வாறு வழங்கப்பட்ட சம வாய்ப்பு எண்ணை சுகாதாரத் துறை இணையதளம் www.tnhealth.org  மூலம் தெரிந்து கொள்ளலாம்.
"ரேண்டம் எண்' எதற்காக? எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களில் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணை சில மாணவர்கள் பெற்றுள்ள நிலையில் தரவரிசைப் பட்டியலில் அவர்களை வரிசைப்படுத்த குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படுகிறது.
அதாவது பிளஸ் 2 தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் மதிப்பெண் சேர்த்து பெற்ற சதவீத மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் ஒரே மதிப்பெண்ணாக இருந்தால், பிளஸ் 2 தேர்வில் வேதியியல் பிரிவில் பெற்ற சதவீத மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் சமமாக இருந்தால் பிளஸ் 2 தேர்வில் நான்காவது விருப்ப பாடப் பிரிவில் சதவீத மதிப்பெண் பார்க்கப்படும்; அதிலும் சமமாக இருந்தால் மாணவர்களின் பிறந்த தேதி பார்க்கப்பட்டு, வயதில் மூத்தோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவை அனைத்திலும் மாணவர்கள் சமமாக இருக்கும் நிலையில், கம்ப்யூட்டர் அடிப்படையில் தயாராக உள்ள ரேண்டம் எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அதிகப்படியான எண்ணுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு மாணவர்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள்.
கடந்த கல்வியாண்டில் 11 பேர்: மேலே குறிப்பிட்ட ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணை எத்தனை மாணவர்கள் எடுத்துள்ளனர் என்பது வரும் 14-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியாகும்போதுதான் தெரிய வரும்.
அப்போது பயன்படுத்தவே இப்போது ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த கல்வியாண்டில் (2013-14) எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். ரேங்க் பட்டியலில் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்ணைப் பெற்ற 11 மாணவர்களுக்கு ரேண்டம் எண் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கலந்தாய்வு எப்போது? எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை ஜூன் 25-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு வரும் 18-ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்