18 வயதுக்கு மேல் தடுப்பூசி முன்பதிவு இன்று துவக்கம்

 18 வயது,தடுப்பூசி முன்பதிவு,இன்று 
சென்னை :நாடு முழுதும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவல் அதிகரித்து வருகிறது. பரவலை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமலாகியுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மே, 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளும் போது, சமூக நோய் எதிர்ப்பாற்றால் உருவாகி, தொற்றை கட்டுப்படுத்த முடியும்' என, டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தடுப்பூசி போட்டுக் கொள்ள, இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என, அரசு அறிவித்துள்ளது.
இதற்கு, https://www.cowin.gov.in என்ற, இணையதளத்திற்குள் சென்று, 'ரிஜிஸ்டர் மை செல்ப்' என்பதை அழுத்த வேண்டும். பின், மொபைல் போன் எண் பதிவு செய்து, பெயர், வயது உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.ஆதார் எண் உள்ளிட்ட, அரசு அங்கீகரித்த அடையாள அட்டை எண்ணை பதிந்து, தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.