அரசு மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் அறிவிப்பு

 latest tamil newsசென்னை: தமிழகம் மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த எஸ்.பி.,பாலசுப்பரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), கொரோனாவால் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக அந்த நோயுடன் போராடி, நன்கு உடல்நிலை தேறி வந்த நிலையில், இன்று (செப்.,25) காலமானார்.

அவரது உடல் இன்று மாலை நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, அவரது உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர் . இதனிடையே கொரோனா அச்சம் காரணமாக கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில் எஸ்.பி.பியின் உடல் செங்குன்றம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த ஆக., 5 முதல், சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எக்மோ உள்ளிட்ட உயிர்காக்கும் கருவிகளுடன், லண்டன் டாக்டர்கள் குழுவின் ஆலோசனையுடன் அவருக்கு சிகிச்சை நடந்து வந்தது. தொடர்ந்து அவரது உடல் மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்தது. கொரோனா நெகட்டிவ் என வந்தபோதும், நுரையீரல் தொற்று முழுவதையும் குணப்படுத்தும் சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்பட்டன. உணவு எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவரது உடல்நிலை தேறி வந்த நிலையில் நேற்று முன்தினம்(செப்.,23) இரவு முதல் அவரது உடல்நிலை திடீரென மிகவும் மோசமானது.தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப்.,25) நண்பகல் 1:04 மணிக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம்(75), காலமானார். இந்த தகவல் அவரது மகன் சரண் உறுதிப்படுத்தினார். ‛உயிர்காக்கும் கருவி மூலம் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக உயிர்பிரிந்தது' என எம்ஜிஎம் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலை 4:30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீட்டுக்கு எஸ்.பி.பி., உடல் அஞ்சலிக்காக எடுத்து செல்லப்படுகிறது. நாளை காலை வரை, சென்னையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

தாமரைபாக்கம் பண்ணை வீட்டிற்கு செல்லும் எஸ்.பி.பி.., உடலுக்கு வழி நெடுகிலும் ஏராளமான மக்கள் மலர்தூவியும்,ரசிகர்கள் செல்போனில் படம் பிடித்தவாறும், இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தவாறு சென்றனர்.