வங்கிக் கடன் அடைப்பதில் மூன்று மாதம் விலக்கு : மக்களுக்கு ஆர்.பி.ஐ., சலுகை

மும்பை : முழு ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மிகப் பெரிய ஆறுதல் தரும் வகையில், மூன்று மாதங்களுக்கான தவணைகள் ஒத்தி வைக்கப்படுவதாக, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.


கடன்களுக்கான வட்டி விகிதத்தை, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, குறைத்துள்ளது. 'சிபில்' மதிப்பீட்டில், இந்த சலுகைகள் தாக்கத்தை ஏற்படுத்தாத வகையில், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளவில், கொரோனா வைரஸ் பரவி வருவதால், நம் நாட்டில், 21 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக, பொருளாதார மந்தநிலை இருந்த நிலையில், இந்த ஊரடங்கால், பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படாமல் தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏழை, எளிய மக்களுக்கு, உணவு தானியங்கள், பணப் பயன், சமையல் எரிவாயு உள்ளிட்டவை, இலவசமாக வழங்கும் வகையில், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்நிலையில், அடுத்த மாதம், 1 - 3ம் தேதி வரை நடக்கவிருந்த, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுவின் கூட்டம், மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்டோருக்கு மிகப் பெரிய ஆறுதல் அளிக்கும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து, ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், நிருபர்களிடம் கூறியதாவது:மக்கள், வங்கிகளில் வாங்கியுள்ள அனைத்து வகைக் கடன்களுக்குமான தவணையைச் செலுத்துவதில், மூன்று மாதம் விலக்கு அளிக்கப்படுகிறது.அதாவது, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் செலுத்த வேண்டிய தவணைகளைக் கட்ட வேண்டாம்; அவை ஒத்தி வைக்கப்படுகின்றன. இதைச் செயல்படுத்த, அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் கடன், வாகனகடன் உட்பட அனைத்து வகையான, இ.எம்.ஐ.,களுக்கும் இது பொருந்தும். இது, வாராக் கடனாகவும் கருதப்படாது என்பதால், சிபில் தர வரிசையில், குறைத்து மதிப்பிடப் படாது.


வட்டி குறையும்
'ரெப்போ' எனப்படும், வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அளிக்கும் கடனுக்கான வட்டி விகிதம், 75 அடிப்படை புள்ளிகளை குறைக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடனுக்கான வட்டி, 5.15 சதவீதத்தில் இருந்து. 4.40 சதவீதமாக குறைகிறது. இதனால், பொதுமக்களின் வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்.

கடந்த, 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகப் பெரிய வட்டி குறைப்பு இது. கடந்த, 2009ல், 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு, வட்டி விகிதம், 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. மேலும், 2004க்குப் பின், மிகக் குறைந்த வட்டி விகிதம் இது.

இதைத் தவிர, 'ரிவர்ஸ் ரெப்போ' எனப்படும், வங்கிகள், ரிசர்வ் வங்கியில் செலுத்தும் தொகைக் கான வட்டியும், 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகள், பணத்தை ரிசர்வ் வங்கியில் முதலீடு செய்வதை விட, அதிக கடன்களை வழங்க ஊக்குவிக்கப்படும்.

மேலும், சி.ஆர்.ஆர்., எனப்படும், வங்கிகள் வைத்திருக்கக் கூடிய ரொக்க இருப்பு விகிதம், 100 புள்ளிகள் குறைக்கப்பட்டு, 3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வங்கிகளிடம் உள்ள கூடுதல் ரொக்க இருப்பான, 1.37 லட்சம் கோடி ரூபாய், புழக்கத்துக்கு வரும். அது, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.


ஜி.டி.பி., உயருமா?


இந்தாண்டு, ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 4.7 சதவீதமாக நிர்ணயித்துள்ளோம். அப்போது தான், 2019 - 2020 நிதியாண்டில், 5 சதவீத இலக்கை எட்ட முடியும். இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு, நம் பொருளாதாரத்தில், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் தாக்கத்துக்கு எதிரான போர் நடந்து வருகிறது. அதில், அனைத்து தரப்பினரும், இணைந்து செயல்படத் தயாராக இருக்க வேண்டும். அதன்படியே, இந்த கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.வட்டி விகிதத்தை குறைக்க, நிதிக் கொள்கை குழுவில் உள்ள, அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

அதே நேரத்தில், இந்த அளவுக்கு குறைப்பதற்கு, 4:2 என்ற அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. தற்போதுள்ள நிலையில், இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து, நம் பொருளாதாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.தற்போது எடுத்துள்ள நடவடிக்கைகளால், 3.74 லட்சம் கோடி ரூபாய், புழக்கத்துக்கு வரும். 2008 - 09ல் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது இருந்ததை விட, நம் பொருளாதாரத்தின் அடிப்படைகள், தற்போது மிகவும் வலுவானதாகவும், சிறப்பாகவும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


மிகப் பெரிய நடவடிக்கை!


கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, நம் பொருளாதாரத்தை காப்பாற்ற, ரிசர்வ் வங்கி மிகப் பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த அறிவிப்புகளால், பணப் புழக்கம் அதிகரிக்கும்; நிதிகளுக்கான செலவு குறையும்; நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் தொழில்களுக்கு மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
நரேந்திர மோடி,பிரதமர்


ஸ்திரத்தன்மை!


பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்துள்ள ரிசர்வ் வங்கிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மாதத் தவணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது, மக்களுக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தரும். ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வட்டிக் குறைப்பை, அனைத்து வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.
நிர்மலா சீதாராமன்

மத்திய நிதி அமைச்சர், பா.ஜ.,


மருத்துவ உபகணங்களுக்கு கடன்'
மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்' என, 'சிட்பி' எனப்படும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி அறிவித்துள்ளது. அவசரகால கடன் திட்டத்தின்கீழ், ஐந்து ஆண்டுகளில் திரும்பச் செலுத்தும் இந்தக் கடன், 5 சதவீத வட்டியில் வழங்கப்படும் என, சிட்பி அறிவித்துள்ளது.


அறிவிப்புக்கு வரவேற்பு
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு, பல்வேறு தரப்பினர் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

அல்கா அன்பரசு, மூடிஸ் முதலீட்டாளர் சேவை : கடன் தவணை செலுத்துவது மூன்று மாதம் ஒத்தி வைக்கப்படும் நடவடிக்கை, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மிகப் பெரிய நிவாரணமாக இருக்கும்.

ரஜ்னீஷ் குமார், எஸ்.பி.ஐ., தலைவர் : வைரஸ் பாதிப்பு தீவிரம் உள்ள நிலையில், பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாமலும், மக்களுக்கு மனிதநேயத்துடனும் எடுக்கப்பட்டுள்ள மிகவும் தைரியமான நடவடிக்கை.

சிரில் ஷெராப், சிரில் அமர்சந்த் மங்கல்தாஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் : நிச்சயமற்ற சூழ்நிலை நிலவும் நிலையில், பொருளாதரத்துக்கு ஏற்படக் கூடிய மிகப் பெரிய பாதிப்பு தடுக்கப்பட்டுள்ளது. கடன் வாங்கியோர், அதை எப்படி செலுத்துவது என்று குழம்பிய நிலையில், அவர்களுக்கு மிகப் பெரிய ஆறுதல் அளிக்கும்.

ஜே.பி. நட்டா, பா.ஜ., தலைவர் : ரிசர்வ் வங்கியின் முடிவுகள், நடுத்தர வர்க்க மக்களுக்கு மிகப் பெரிய உதவியாகும். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட, முற்போக்கான முடிவை வரவேற்கிறேன்.

தர்மேந்திர பிரதான், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர், பா.ஜ., : நடுத்தர மக்கள் மற்றும் தொழில் துறையினருக்கு, இந்த அறிவிப்புகள், நிம்மதியை அளிக்கும்.

கவுதம் ஹரி சிங்கானியா, ரேமண்ட் நிறுவனத் தலைவர் : நிதிச் சந்தையை ஸ்திரப்படுத்தும் வகையிலும், பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையிலும், இந்த அறிவிப்புகள் அமைந்துள்ளன.

ராஜிவ் அகர்வால், எஸ்ஸார் துறைமுகங்களின் தலைமை செயல் அதிகாரி : கடன் தவணை ஒத்திவைப்புடன், வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கும், தொழில் துறையினருக்கும் மிகுந்த பலன் அளிக்கும். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிவாரணத்தை, ரிசர்வ் வங்கி அளித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்
ரிசர்வ் வங்கி அறிவிப்புகளில் முக்கிய அம்சங்கள்:

* அனைத்து வகை கடன்களுக்கான, மாதத் தவணைகள், மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பு* ரெப்போ வட்டி விகிதம், 75 புள்ளிகள் குறைத்து, 4.4 சதவீதமாக நிர்ணயம்

* அனைத்து வகை கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும்

* ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், 90 புள்ளிகள் குறைத்து, 4 சதவீதமாக நிர்ணயம்

* ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளால், 3.74 லட்சம் கோடி ரூபாய் பணப் புழக்கம்

* வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம், 100 புள்ளிகள் குறைத்து, 3 சதவீதமாக நிர்ணயம்

* இதன் மூலம், வங்கிகளின் கையிருப்பில் உள்ள, 1.37 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்துக்கு வரும்

* கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தாலும், 2019 - 20 நிதியாண்டில், ஜி.டி.பி., வளர்ச்சி,
5 சதவீதமாக இருக்கும்.