5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்?

ஈரோடு : ''ஐந்து மற்றும், எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது பொது விதி. இதற்கு, தமிழகத்தில், மூன்றாண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.





ஈ.வெ.ராமசாமி பிறந்த நாளை முன்னிட்டு, ஈரோட்டில், ஈ.வெ.ராமசாமி நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின், அவர் கூறியதாவது:காலாண்டு தேர்வுக்குப்பின், பள்ளி விடுமுறை இல்லை எனக்கூறி வருகின்றனர். அவ்வாறு ஏதும் அறிவிக்கப்படவில்லை. வழக்கம் போல காலாண்டு விடுமுறை உண்டு. இதுபோன்ற பல வதந்திகளை, பரப்பி வருவதால் குழப்பம் ஏற்படுகிறது.




அதேநேரம், காந்தியடிகளின் பிறந்தநாளை, பள்ளி கல்வித்துறை வாயிலாக சிறப்பாக கொண்டாட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான ஆயத்தப்பணி நடந்து வருகிறது. இவ்விழாவுக்காகவும், காலாண்டு அட்டைவணை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது பொது விதி. இது, தேசிய அளவில் கடைபிடிக்கப்படும். தமிழகத்தில் இதற்கு, மூன்றாண்டு காலம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.





இந்த கால கட்டத்தில், மாணவர்கள் தங்கள் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். எனவே, அடுத்த மூன்றாண்டுகளுக்கு தற்போதைய நிலை தொடரும்.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவு, முதல்வரால் எடுக்கப்படும். இதுபற்றி கூற இயலாது. இவ்வாறு, செங்கோட்டையன் கூறினார்.




'தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான்' ஈரோடு மாவட்டம், கோபி அருகே பொலவக்காளிபாளையத்தில், குளிர்சாதன வசதியுடன் கட்டப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க, அலுவலகத்தை, திறந்து வைத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுபவர்களுக்கு, ஆன்லைனில் ஹால் டிக்கெட் அனுப்பப்படுகிறது. கவுன்சிலிங் முறையில் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்படுவர்.