அரசு தொடக்க பள்ளிகளில் படித்து, ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு, தமிழ் வாசிக்க தெரியாததால், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டம், தமிழகத்தில், 2009 முதல் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் கீழ், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்கப்படும். அதனால், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு, தேர்வுகள் எதுவும் இன்றி, தேர்ச்சி
செய்யப்படுகின்றனர்.தேர்வுகள் இல்லாததால், அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்துவதில்லை. மாணவர்களின் கற்றல் திறனில், ஆசிரியர்களும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், ஐந்தாம் வகுப்பு முடித்து, ஆறாம் வகுப்பில் சேரும் பெரும்பாலான மாணவர்களுக்கு, தமிழ் எழுத, படிக்கவே தெரியாத நிலை உள்ளது.
இதையடுத்து, இந்த ஆண்டு, அரசு தொடக்க பள்ளிகளில் படித்து, உயர்நிலை பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்பு திறன் ஆய்வு செய்யப்பட்டது. அதில், பல மாணவர்கள், தமிழ் வாசிக்கவே திணறியது தெரிய
வந்தது.அதைத்தொடர்ந்து, அந்த மாணவர்கள் படித்த, தொடக்க பள்ளிகள்; அதன் ஆசிரியர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு, அவர்களிடம் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.