பி.இ. படித்து அரியர் வைத்திருப்பவர்கள் தேர்வெழுத கடைசி வாய்ப்பு: அண்ணா பல்கலை. ஆட்சிக் குழு ஒப்புதல்

கடந்த 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு பி.இ. படித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு, அரியர் தேர்வெழுத கடைசி வாய்ப்பைக் கொடுக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு
செய்துள்ளது. இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
பொறியியல் படிப்பவர்கள் தேர்வில் தோல்வியடையும் பாடங்களுக்கு அரியர் தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வழங்கப்படும். அதற்குள்ளாக, அவர்கள் அரியர் பாடங்களை எழுதி தேர்ச்சி பெற்றால்தான், பட்டச் சான்றிதழை பெறமுடியும்.
இருந்தபோதும், மாணவர்களின் நலன் கருதி அரியர் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பை அவ்வப்போது பல்கலைக்கழகம் அளித்து வரும். அதுபோல இந்த முறை கடைசி வாய்ப்பை வழங்க பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்சிக் குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் கடைசி வாய்ப்புக்கு ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் குமார் கூறியது:
பொறியியல் மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பு இது. 2011-ஆம் ஆண்டுக்குப் பிறகு பி.இ. படித்து அரியர் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வரும் நவம்பர்-டிசம்பர் பருவத் தேர்வில் பங்கேற்று தங்களுடைய அரியர் தாள்களை எழுதிக்கொள்ள முடியும். இந்த சிறப்பு வாய்ப்பு மூலம் 30 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவர் என்றார் அவர்.
அதேபோல, அண்ணா பல்கலைக்கழகத் துறைகளுக்கு 2019-20-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய கல்வித் திட்டம், அரியர் நடைமுறை, தேர்வுத்தாள் ஆய்வு நாள் ஆகிய புதிய நடைமுறைகளுக்கும் ஆட்சிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.