தேர்தல் பணிக்கு, 6,772 மண்டல குழுக்கள்

சென்னை : ''தமிழகத்தில், தேர்தல் அன்று, ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, ஓட்டுச்சாவடிக்கு எடுத்துச் செல்ல, 6,772 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.அவர் அளித்த பேட்டி:தேர்தல் விதிமீறல் குறித்து, பொது மக்கள் புகார் அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட, 'சி விஜில்' என்ற, 'மொபைல் ஆப்' வழியே, 2,159 புகார்கள் வந்துள்ளன.இவற்றில், 946 புகார்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக, 4,282 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஓட்டுப்பதிவுக்கு தேவையான, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் பொருட்களை, எடுத்து செல்வதற்காக, 6,772 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு குழுவிலும், 'பெல்' நிறுவன பொறியாளர் ஒருவர், ஒரு துணை தாசில்தார், இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்கள், உதவியாளர், போலீசார் இடம் பெற்றிருப்பர். 10 ஓட்டுச்சாவடிகளுக்கு, ஒரு மண்டல குழு அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஏதேனும் பழுது ஏற்பட்டால், உடனடியாக அங்கு சென்று, இயந்திரத்தை சரி செய்வர்.
இல்லையெனில், அவர்களிடம் இருக்கும், இயந்திரத்தை வழங்குவர். ஓட்டுப்பதிவு முடிந்த பின், ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு எடுத்துச் செல்வர். மண்டல குழுவில் உள்ளவர்களுக்கும், உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவினரிடமும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள, ஓட்டுச்சாவடிகளுக்கு செல்லும் பாதை, மாற்றுப்பாதை வரைபடம் இருக்கும்.ஓட்டுப்பதிவு அன்று ஓட்டுப்பதிவை முழுமையாக கண்காணிக்க, தலைமை செயலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அறையில், 16 கம்ப்யூட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் வழியே, ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க, 16 மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு செயல்பாடுகளை கண்காணிக்க, இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கட்டணமில்லா தொலைபேசி, '1950' எண்ணுக்கு வரும் புகார்களை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க, தனி கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை!அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்களுடன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, இன்று மாலை, 6:00 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, கலந்துரையாட உள்ளார்.இதில், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள், தேர்தல் டி.ஜி.பி., அசுதோஷ் சுக்லா கலந்து கொள்ள உள்ளனர். கூட்டத்தில், தேர்தல் ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை, தபால் ஓட்டுகள் வினியோகம், துணை ராணுவ வீரர்களை பணியமர்த்துதல் போன்ற விஷயங்கள் குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளன.போலீசாருக்கு சிறப்பு ஏற்பாடு!
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் மையங்களில், தபால் ஓட்டு போட, தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல், 'தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார், 10ம் தேதியிலிருந்து, 13ம் தேதிக்குள், ஒரு நாளில், குறிப்பிட்ட மையங்களில், தபால் ஓட்டளிக்க, ஏற்பாடு செய்ய வேண்டும்' என, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.