புயல் பாதித்த 4 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது: சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு

கஜா புயல் பாதித்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட அரசு
மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் கஜா புயலால் தஞ்தாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களின் கரையோர கிராமங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டு சில நாள்களை கடந்தும் பல கிராமங்களில் மக்கள் குடிநீர், மின்சார வசதியின்றி தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவராண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.
கஜா புயல் பாதித்த தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் பேருக்கு மருத்துவ சிகிச்சை தரப்பட்டுள்ளது; 6,059 முகாம்கள் அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், புயல் பாதித்த தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களின் அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க டிசம்பர் 15 ஆம் தேதி வரை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அறிவிப்புவெளியிட்டுள்ளது.