2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு எப்படி தயாராகிறது ஃப்ளிப்கார்ட்? #VikatanExclusive

ஒவ்வொரு பிக் பில்லியன் டேவிற்கு பின்னாலும் இப்படி துல்லியமான திட்டமிடல்களும், டெக்னிக்கல் வேலைகளும் ஏராளமாக நடந்துகொண்டிருக்கின்றன.
2,000 ஊழியர்கள்...8 மாத திட்டமிடல்...#BigBillionDay-க்கு எப்படி தயாராகிறது ஃப்ளிப்கார்ட்? #VikatanExclusive
எந்நேரமும் திறந்தே இருக்கும் ஆன்லைன் கடை; அவ்வப்போது மட்டும் ஆபஃர்கள் குவியும் மின்அங்காடி. 2014-க்கு முன்புவரைக்கும் ஃப்ளிப்கார்ட் மீதிருந்த பிம்பம் இதுதான். ஆனால், அதன்பிறகு தன் நிறுவனத்தின் பிம்பத்தை மட்டுமின்றி, இந்திய -காமர்ஸின் முகத்தையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியது ஃப்ளிப்கார்ட். மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து ஆன்லைன் மொபைல் மார்க்கெட்டை தன்பக்கம் இழுக்க முடிவுசெய்தது. திடீரென மோட்டோரோலா நிறுவனத்துடன் கைகோத்து, மோட்டோ மொபைல்களை விற்பனை செய்ய திட்டமிட்டது. மோட்டோ E மாடல்களை விற்பனை செய்தபோது ஃப்ளிப்கார்ட் தளமே திக்குமுக்காடிப் போய், சர்வர்கள் கிராஷ் ஆனது. ஒரு மொபைலை வாங்க இந்தளவு ஆன்லைனில் மக்கள் குவிந்தது இந்தியாவில் அதுதான் முதல்முறையாக இருந்திருக்கும். அந்தச் சம்பவம் அதே உற்சாகத்தில் அந்நிறுவனம் எடுத்துவைத்த அடுத்த பெரிய அடி, பிக் பில்லியன் டே.
 
ஒரே நாள்தான்; 24 மணி நேரம். ஃப்ளிப்கார்ட்டின் எல்லா செக்ஷன்களிலும் தள்ளுபடிகள் இருக்கும். மொபைல்கள், கணினிகள், ஆக்சசரீஸ்கள், டிவி, பிரிட்ஜ், புத்தகங்கள்... இப்படி எல்லாமே, ஆச்சர்ய விலையில் ஒரே ஒருநாள் மட்டும் இருக்கும். எவ்வளவு வேணாலும் வாங்கிக் குவிக்கலாம். எத்தனை மணி நேரம் வேணாலும் ஷாப்பிங் செய்யலாம். அக்டோபர் 6-ம் தேதி விற்பனை தொடங்கியது. தங்கள் தளத்திற்கு பொங்கிவரும் வாடிக்கையாளரைச் சமாளிப்பதற்காக 5,000 சர்வர்களைத் தயாராக வைத்திருந்தது அந்நிறுவனம். ஆனால், அவை எதுவுமே எதிர்பார்த்த அளவுக்குப் பலனளிக்கவில்லை. விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஃப்ளிப்கார்ட் தளம் பலருக்கும் ஓப்பன் ஆகவில்லை. ஓப்பன் ஆனவர்களுக்கு முழுமையாக ஷாப்பிங் செய்யமுடியவில்லை. இதே நேரத்தில்தான் இந்தியன் ரயில்வேயின் தத்கல் டிக்கெட் புக்கிங்கும் தொடங்கியது. இன்டர்நெட்டில் ஃப்ளிப்கார்ட்டின் டிராஃபிக்கால் பல்வேறு வங்கிகளின் பேமென்ட் கேட்வேக்கள் செயலிழந்தன. IRCTC-யே கொஞ்சம் ஆடிப்போனது.
ஃப்ளிப்கார்ட் Warehouse
ஃப்ளிப்கார்ட் Warehouse
ஃப்ளிப்கார்ட்டில் பொருளை கார்ட்டில் சேமித்துவிட்டு, பணம் செலுத்துவதற்குள் பலருக்கும் அவுட் ஆப் ஸ்டாக் மெசேஜ் வந்தது. ஆர்டர் பிளேஸ் ஆனவர்களில் சிலருக்கு சில நிமிடங்களில் ஆர்டர் கேன்சல் ஆன மெசேஜ் வந்தது. ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் நொடிப்பொழுதில் விற்றுத் தீர்ந்தன. பிக் பில்லியன் டேவில் ஃப்ளிப்கார்ட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. உடனே #BigBillionDay ஹேஷ்டேக்கை கொண்டு சோஷியல் மீடியாவில் ஃப்ளிப்கார்ட்டை திட்டித்தீர்த்தனர் வாடிக்கையாளர்கள். இன்னும் சிலர் போட்டியை அதிகப்படுத்துவது போலக்காட்டி விற்பனையை அதிகப்படுத்தும் உத்தி இது என வறுத்தெடுத்தனர். மொத்தத்தில் பெரும் ஷாப்பிங் திருவிழாவாக முடிந்திருக்க வேண்டிய அந்த தினம், வாடிக்கையாளர்களுக்கு வெறுப்புடன் முடிந்தது. இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத ஃப்ளிப்கார்ட்டிற்கும் அன்றைய தினம் கசப்பான உணர்வுதான். அடுத்த தினமே, வாடிக்கையாளர்களிடம் சச்சின் பன்சாலும், பின்னி பன்சாலும் முழு மன்னிப்பு கோரினார்கள்.
அந்த ஒரு தினம் ஃப்ளிப்கார்ட் செய்த தவறுகள் இவையெல்லாம் என்றால், அந்தத் தினம் இந்திய -காமர்ஸ் நிறுவனங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவை ஏராளம். அவ்வப்போது மட்டும் ஷாப்பிங் திருவிழாக்களை நடத்திவந்த வழக்கமான -காமர்ஸ் ஃபார்முலாவுக்கு பதில், ஒரேநாளில் மெகா ஷாப்பிங் திருவிழா நடத்தினால் மக்கள் ஆதரவு தருவார்கள் என இந்த சம்பவம்தான் சொன்னது; அதன்பின்னர்தான் பிறநிறுவனங்களும் இதே ஃபார்முலாவைக் கையிலெடுத்தன. இன்று அமேசான், ஸ்னாப்டீல், பேடிஎம் போன்ற அத்தனை ஷாப்பிங் திருவிழாவுக்கும் பிக் பில்லியன் டேதான் அடிப்படை. முதல் வருடம் ஒருநாள்கூட சர்வர்களைச் சரியாக வைக்காத ஃப்ளிப்கார்ட், இந்த வருடம் 5 நாள்களுக்கு பிக் பில்லியன் டேவை நடத்துகிறது. இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லை. வெப்சைட் டிராஃபிக்கை கையாள்வதோடு மட்டுமின்றி, ஆர்டர்களை நிர்வகிப்பது, அவற்றைச் சரியாக டெலிவரி செய்வது, பணப்பரிவர்த்தனைகளைக் கையாள்வது என எல்லா ஏரியாவையும் AI, டேட்டா அனலிடிக்ஸ், மெஷின் லேர்னிங் அல்காரிதம்கள் மூலம் ஹைடெக்காக மாற்றி செயல்பட்டுவருகிறது.
Flipkart
 Flipkart
ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே செல்லும் ஆன்லைன் விற்பனையை ஃபிளிப்கார்ட் எப்படி சமாளிக்கிறது, இவ்வளவு பெரிய ஷாப்பிங் திருவிழாவுக்குப் பின்னால் ஃப்ளிப்கார்ட்டின் டெக்னிக்கல் டீம் என்னவெல்லாம் செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள அந்நிறுவனத்தின் பிரின்சிபல் ஆர்க்கிடெக்ட்டான ரகுநாத்திடம் பேசினேன்.
"முதல் பிக் பில்லியன் டே டெக்னிக்கலாக மிகப்பெரிய சறுக்கலை சந்தித்தது. அப்போது பின்னணியில் என்ன நடந்தது எனக் கூறமுடியுமா?"
"எங்கள் வாடிக்கையாளர்களைக் குறைவாக மதிப்பிட்டதுதான் அதற்குக் காரணம். அப்போது அந்தளவுக்கு வாடிக்கையாளர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போது இருப்பதுபோல மொபைல் இன்டர்நெட் அப்போது அதிகளவில் இல்லை. டெக்ஸ்டாப்கள் அதிகளவில் டிராஃபிக் கொண்டவையாக இருந்தன. இதனால் எத்தனைப் பேர் ஃப்ளிப்கார்ட்டிற்கு வருவார்கள் எனக் கணக்கிடுவது கடினமாக இருந்தது. அதை நாங்கள் சரியாக கணித்திருந்தாலே, எத்தனைப் பேர் வருவார்கள், எந்தப் பொருளை அதிகம் வாங்குவார்கள் போன்ற பேட்டர்ன்களை சரியாகக் கணித்து வர்த்தகத்தைச் சிறப்பாக நடத்தியிருக்க முடியும். 2014-ல் முதல் பிக் பில்லியன் டேவில், சராசரியாக ஒருநாளில் எங்கள் தளத்திற்கு வருபவர்களை விடவும், 25 மடங்கு வாடிக்கையாளர்கள் அதிகமாக வந்தனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கைக்கு எங்களின் சிஸ்டம் தயாராக இருக்கவில்லை. அதனால்தான் அப்போது சர்வர்கள் கிராஷ் ஆகின. ஆனால், அந்த அனுபவம்தான் எங்களுக்கு நிறையப் பாடங்களை சொல்லிக்கொடுத்தது. சாதாரணமாக மூன்று வருடங்களில் கற்கும் விஷயங்களை அந்த ஒரே வருடத்தில் கற்றுக்கொண்டோம். உடனே அடுத்த வருடம் புதிய டேட்டா சென்டர் மற்றும் சொந்தமாக பிரைவேட் கிளவுடை அமைத்தோம். எங்கள் சர்வர்களின் திறனை அதிகப்படுத்தினோம். 2015-ல் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மூன்று பிக் பில்லியன் டேக்கள், எத்தனையோ ஃபிளாஷ் சேல்களைக் கடந்து வந்திருக்கிறோம். இந்தமுறை பிக் பில்லியன் டேவின் ஆரம்ப நாளில் ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் மொபைல்களை விற்றிருக்கிறோம். கடந்த வருடம் நடந்த விற்பனையை விடவும் இருமடங்கு அதிகமாக இலக்கு வைத்திருக்கிறோம். இது எல்லாவற்றிற்கும் பின்னாலும் பெரிய டெக்னிக்கல் சப்போர்ட் இருக்கிறது.
"நாளிதழ் முழுக்க விளம்பரங்கள், ஆஃபர் குறித்த செய்திகள், ஆன்லைன் விளம்பரங்கள் என #BigBillionDays-க்கு வாடிக்கையாளர்களை ஃப்ளிப்கார்ட் எப்படித் தயார்படுத்துகிறது எனத் தெரியும். இவ்வளவு பெரிய நிகழ்ச்சிக்கு ஃப்ளிப்கார்ட் எப்படி தயாராகிறது? டெக்னிக்கலாக என்னவெல்லாம் செய்வீர்கள்?"
"ஒவ்வொரு வருடமும் பிக் பில்லியன் டே முடிந்தபிறகு அதன்மூலம் கிடைக்கும் டேட்டாவை வைத்து, அடுத்த வருடத்திற்கான திட்டமிடல்களைத் தொடங்குவோம். 2014 போல இன்னொருமுறை நடந்துவிடக்கூடாது என்பதால், விற்பனைக்குப் பல மாதங்கள் முன்பே இதற்கான பணிகளைத் தொடங்கிடுவோம். இந்த வருடத்திற்கான பணிகள் பிப்ரவரி மாதமே தொடங்கிவிட்டன. டேட்டா சென்டர்களில் என்ன மாற்றங்கள் செய்யவேண்டும், இந்த வருடம் எவ்வளவு விற்பனை ஆகும் எனக் கணிப்பது, அதற்கேற்ப கிளவுடு சர்வர்களை அதிகரிப்பது போன்ற முன்னேற்பாடுகள் அனைத்தும் சில மாதங்களுக்கு முன்னரே நடந்துமுடிந்துவிடும். பின்னர் இந்த வருடம் எவ்வளவு இலக்கு வைத்திருக்கிறோம், அதை எப்படி அடைவது, அதற்கான டெக்னிக்கல் சப்போர்ட் என்னவெல்லாம் தேவைப்படும் என்பது குறித்து ஆலோசிப்போம். இந்த வருடம் 2X இலக்கு வைத்திருக்கிறோம் என்றால், இதனை வெறும் விற்பனை மூலம் மட்டும் அடையமுடியாது. எந்தப் பொருள்களை அதிகம் பேர் வாங்குவார்கள், எதற்கான விற்பனையை முன்கூட்டியே தொடங்கவேண்டும், ஐந்து நாள்கள் விற்பனையில் எந்தெந்தப் பொருள்களை எப்போது விற்கவேண்டும் போன்ற துல்லியமான திட்டமிடல்கள் மூலம் மட்டுமே அடையமுடியும்.
2016 பிக் பில்லியன் டேவின் போது
 2016 பிக் பில்லியன் டேவின் போது
உதாரணமாக ஒரு பொருளுக்கு அதிக டிமாண்ட் இருக்கிறது என்றால், அந்நேரம் தளத்திற்குக் கூடுதல் டிராஃபிக் வரும். அந்தச் சமயம் அதனால் பிற பொருள்களின் விற்பனை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. அப்படியெனில் அந்த அதிக டிராஃபிக்கை எப்படி கையாள்வது, அந்த டிமாண்ட் உள்ள பொருளை எப்படி ஐந்து நாள்களும் விற்பனைக்குப் பிரித்துவைப்பது, அந்தப் பொருளை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை (Seller) எப்படி ஒருங்கிணைப்பது, ஐந்து நாள்களும் ஃப்ளிப்கார்ட்டை எப்படி முழுமையாக Engaged-ஆக வைத்திருப்பது போன்ற விஷயங்களை யோசிக்கவேண்டும். இதற்காக டேட்டா சயின்டிஸ்ட்கள், சாஃப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் இன்ஜினியர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தேவை. இந்த பிக் பில்லியன் டேவில் மட்டும் 2000 பொறியாளர்கள் இரவும் பகலுமாக பணிபுரிகிறார்கள்.
இவர்களின் பணி முடிந்துவிட்டால், விற்பனை தொடங்குவதற்கு சில வாரங்கள் முன்பு நிறையச் சோதனைகள் மேற்கொள்வோம். சர்வர்கள் எவ்வளவு டிராஃபிக்கை எப்படிக் கையாள்கின்றன, மென்பொருள்களில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கின்றனவா போன்ற சோதனைகள் வாரக்கணக்கில் நடக்கும். இவையெல்லாம் முடிந்தபின்புதான் விற்பனைக்குச் செல்வோம். இந்தத் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த டெக்னிக்கல் முயற்சிதான் ஒவ்வொரு பிக் பில்லியன் டேவிலும் எங்கள் இலக்குகளை அடைய உதவுகிறது."
"தீபாவளி சீசனில் பிறநிறுவனங்களுக்கு முன்பே ஷாப்பிங் திருவிழாவுக்கான தேதியை ஃப்ளிப்கார்ட் அறிவித்துவிடும். அந்த தேதியை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்? 5 - 15 இடையேதான் மக்களின் சம்பளம் வரும் என்பதால்தான் இந்த வருடம் 10-ம் தேதி நிர்ணயிக்கப்பட்டதா?"
 à®°à®•à¯à®¨à®¾à®¤à¯
"நீங்கள் சொன்ன சம்பள விஷயம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், அதைவைத்து மட்டுமே இந்தத் தேதிகள் இறுதிசெய்யப்படுவதில்லை. ஒவ்வொரு வருடமும் தேதி மாறிக்கொண்டேதான் வருகிறது. சம்பள விஷயம் மட்டும்தான் என்றால் 5-15-ம் தேதிகள் எல்லா மாதமும்தான் வருகிறது. ஆனால், நாங்கள் அவற்றையெல்லாம் தேர்வு செய்வதில்லையே? இந்தியாவின் ஷாப்பிங் கலாசாரத்தை மற்ற அனைத்து நிறுவனங்களைவிடவும் ஃப்ளிப்கார்ட் நன்கு புரிந்து வைத்திருக்கிறது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் அனைத்து இடங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளிதான். இந்தச் சமயத்தில் நாடு முழுவதுமே மக்கள் ஷாப்பிங்கிற்காக நிறையப் பணம் செலவு செய்கின்றனர். எனவேதான் எங்கள் பிக் பில்லியன் தினங்களை இதோடு பொருந்திப்போகுமாறு வைக்கிறோம்."
"இணையதள டிராஃபிக்கை தாண்டி, டெலிவரி, ஷிப்மென்ட் போன்றவையும் அதிகரிக்குமே?"
ரகுநாத்"ஆமாம், ஆர்டர் எடுப்பதோடு மட்டும் எங்கள் பணி முடிந்துவிடுவதில்லை. அதற்குப்பிறகு டெலிவரி செய்யும் வரையிலுமே பொருள்கள் எங்கள் பொறுப்பில்தான் இருக்கும். அதற்கான முன்னேற்பாடுகளையும் முதலிலேயே செய்துவிடுவோம். ஏற்கெனவே சொன்னதுபோல டேட்டாவின் மூலம்தான் எங்கள் திட்டமிடல்களை மேற்கொள்கிறோம். அதன்படி எந்தத் தினத்தில் வைத்தால் மக்கள் அதிகம் ஷாப்பிங் செய்வார்கள், இலக்குகளை எளிதில் எட்டமுடியும் போன்ற டேட்டாவை ஆராய்ந்துதான் இவற்றையெல்லாம் முடிவு செய்வோம். முந்தைய வருட டேட்டாவை எங்களின் விற்பனையாளர்களோடும் பகிர்ந்துகொள்வர். இதன்மூலம் அவர்களும் தங்கள் பொருள்களின் டிமாண்ட் உணர்ந்து, ஸ்டாக்குகளை சரியாக வைக்கமுடியும். இப்படி வேர்ஹவுஸ்களில் எல்லா பொருள்களுக்கும் ஸ்டாக்குகளை, டிமாண்ட்டிற்கு ஏற்ப இருக்கிறதா என்பதை உறுதிசெய்துவிட்டுதான் விற்பனையையே தொடங்குவோம்.
இதேபோல பொருள்களை டெலிவரி செய்வதற்கான லாஜிஸ்டிக்ஸ் விஷயங்களும் தயாராக இருக்கும். இந்த வருடம் எங்களின் சேமிப்புக்கிடங்குகளின் அளவை இருமடங்கு உயர்த்தியிருக்கிறோம். இதன்மூலம் அதிகமான பொருள்கள் எங்கள் கிடங்குகளில் இருக்கும். இவற்றை இன்வென்ட்டரியில் இருந்து டெலிவரி செய்யும் வரைக்கும் கையாள்வதற்காக 20,000 ஊழியர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே AI சிஸ்டம்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பர். எனவே பணிகள் திட்டமிட்டபடி நடக்கும்."
"இதுபோன்ற மெகா ஷாப்பிங் திருவிழாக்களின்போது, ஃப்ளிப்கார்ட்டில் புதிதாக எதுமாதிரியான அல்காரிதம்கள் பயன்படுத்தப்படும்?"
"வழக்கமான நாள்களில் எங்கள் தளத்தில் இருக்கும் அதே அம்சங்கள் என்பதால், புதிதாக எதுவும் இருக்காது. ஆனால், பிக் பில்லியன் டே சமயம் நிறையபேர் தளத்தில் என்னென்ன ஆஃபர்கள் இருக்கின்றன என மட்டுமே பார்க்க வருவார்கள். இவர்களின் எண்ணிக்கையே அதிகளவில் இருக்கும்பட்சத்தில், ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு அந்தச் சமயத்தில் சிக்கல் ஏற்படலாம். இந்தப் பிரச்னை வராமல் இருப்பதற்காக சில அல்காரிதம்கள் பயன்படுத்துவோம். அதன்மூலம் யாரெல்லாம் நிஜமாகவே ஷாப்பிங் செய்ய வருகிறார்கள், யாரெல்லாம் வெறுமனே தளத்தை மட்டுமே பார்க்க வருகிறார்கள் எனக் கண்டுபிடித்துவிடலாம். இதன்பிறகு ஷாப்பிங் செய்பவர்களுக்கு மட்டும் முழு தளமும் சிக்கலின்றி லோடு ஆவதுபோலவும், பார்வையிட மட்டும் வருபவர்களுக்குக் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டுமே தெரியும்படியும் மாற்றிவிடலாம். இது எல்லா சமயமும் நடக்காது; ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கால அளவில், அதிகமான நபர்கள் தளத்திற்குள் வந்து, சர்வரின் பணி அதிகமானால் மட்டுமே இது நடக்கும். இதனால், ஷாப்பிங் செய்ய வருபவர்கள் பொருள்களைப் பார்வையிடுவதில் தொடங்கி பணம் செலுத்துவது வரை அனைத்தையும் எளிதாகச் செய்துவிட முடியும். தொழில்நுட்பக் கோளாறுகளால் யாரேனும் ஒரு வாடிக்கையாளரின் ஷாப்பிங் பாதித்தால்கூட அது எங்களுக்கு நஷ்டம்தான். எனவே இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்கள்கூட எங்கள் வர்த்தகத்தில் மிக முக்கியம்."
"அடிக்கடி பிக் பில்லியன் டே பெயரால் நிறையப் போலி விளம்பரங்கள் ஃபேஸ்புக், வாட்ஸ்அப்களில் பரப்பப்படுகின்றன. இந்தப் பிரச்னை பிற நிறுவனங்களுக்கும் உண்டு. இதையெல்லாம் கவனிக்கிறீர்களா?"
"எங்களின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, யாரேனும் மோசடி செய்தால் எங்களால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால், இப்படி வாட்ஸ்அப்களில் தவறாகப் பரப்பும் விஷயங்களை எதுவுமே செய்யமுடியாது. எங்கள் சார்பில் ஃப்ளிப்கார்ட்டின் தளத்தையும், அதிகாரபூர்வமான ஆப்பையும் மட்டுமே பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்களை அறிவுறுத்துகிறோம். வங்கிகள் போலவே நாங்களும் OTP, பாஸ்வேர்டு போன்றவற்றை பிறரிடம் ஷேர் செய்யவேண்டாம் எனக்கூறிவருகிறோம். எனவே மக்கள்தான் இதுபோன்ற போலி விஷயங்களில் கவனமாக இருக்கவேண்டும்."
ஃப்ளிப்கார்ட்டில் ரெட்மி மொபைலை ஆர்டர் செய்யப்போனால், நமக்குக் கிடைக்குமோ கிடைக்காதோ என ஒரு பரபரப்பு இருக்குமே... அதைப்போலவே, ஃப்ளிப்கார்ட்டிற்குப் பின்னாலும் பிக் பில்லியன் டேவில் இத்தனை பரபரப்புகள் இருக்கின்றன.