சென்னையில் இன்று 'தினமலர் - உங்களால் முடியும்' இன்ஜி., கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

இன்ஜினியரிங் ஆன்லைன் கவுன்சிலிங் குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு தரும், 'தினமலர்' உங்களால் முடியும் நிகழ்ச்சி, சென்னையில் இன்று நடக்கிறது. இதில், அண்ணா பல்கலை அதிகாரிகள் விளக்கம் தர உள்ளனர்.அண்ணா பல்கலையின்
இன்ஜி., கவுன்சிலிங்கில், விண்ணப்ப பதிவு மட்டுமின்றி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதும், இந்த ஆண்டு முதல், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது.


இந்த நடைமுறையில், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.இதை தீர்க்கும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், உங்களால் முடியும் நிகழ்ச்சி, சென்னையில், இன்று நடக்கிறது.தினமலர் நாளிதழுடன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி இணைந்து, இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை; அதற்கான நடைமுறைகள்; புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள, ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை; விருப்பமான கல்லுாரி மற்றும் பாடப்பிரிவுகளை, கணினியில் தேர்வு செய்யும் நடைமுறைகள் ஆகியன குறித்து, விளக்கம் அளிக்கப்பட உள்ளது.

தமிழ்நாடு இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி செயலரும், அண்ணா பல்கலை பேராசிரியருமான, ரைமண்ட் உத்தரியராஜ், நிகழ்ச்சியில் பங்கேற்று, கவுன்சிலிங் விதிகளை விரிவாக எடுத்துரைப்பார்.இன்ஜினியரிங் கல்லுாரிகளை தேர்வு செய்யும் முறை குறித்து, கல்வி ஆலோசகர், ஜெயப்பிரகாஷ்காந்தி, விளக்கம் அளிப்பார்.ஆனந்த் இன்ஸ்டிடியூட் ஆப் ஹையர் டெக்னாலஜி மற்றும் ஆனந்த் ஸ்கூல் ஆப் ஆர்கிடெக்சர்; அப்போலோ இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் ரெமோ இண்டர்நேஷனல் காலேஜ் ஆப் ஏவியேஷன் ஆகிய கல்வி நிறுவனங்கள், இந்த நிகழ்ச்சியை உடன் இணைந்து நடத்துகின்றன.நிகழ்ச்சி எங்கே?

'உங்களால் முடியும்' நிகழ்ச்சி, சென்னை, தி.நகர், ஜி.என்.செட்டி சாலையில் உள்ள, வாணி மஹாலில், இன்று காலை, 10:30 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது. இதில் பங்கேற்க, மாணவர்கள், பெற்றோருக்கு எந்த கட்டணமும் இல்லை.நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் விதிகள் அடங்கிய, 'உங்களால் முடியும்' கையேடு, இலவசமாக வழங்கப்படும். நிகழ்ச்சியில் பங்கேற்கும், 1,000 பேர், இலவச ரோபாட்டிக் பயிற்சி பெறும் வாய்ப்பு உள்ளது. மேலும், இன்ஜினியரிங் படிப்பதற்காக, 50 மாணவர்கள், 'ஸ்காலர்ஷிப்' திட்டத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்