பல்கலை, கல்லூரிகளில் புதிய நியமனங்கள் நிறுத்தம்

முறைகேடு பிரச்னை எதிரொலியாக, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், பேராசிரியர் மற்றும் பணியாளர் பதவிகளுக்கான, புதிய நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.உயர்கல்வி துறையில் நடந்த முறைகேடு பிரச்னைகளின் உச்சகட்டமாக, பேராசிரியர் நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக, பாரதியார் பல்கலை துணைவேந்தர், கணபதி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். 


அதேபோல, அண்ணா பல்கலையில், மக்கள் தொடர்பு அதிகாரி பதவிக்கு, போலி கடிதம் தயாரித்து, ஒரு கும்பல் வசூல் வேட்டை நடத்தி உள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித்துறையும், உளவுத்துறையும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்நிலையில், மேலும் பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், புதிய நியமனங்களை நிறுத்தி வைத்து, உயர்கல்வி செயலர், சுனில் பாலிவால் உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை, எந்த பல்கலையிலும், கல்லுாரியிலும், பேராசிரியர் மற்றும் பணியாளர் பதவிகளுக்கு பணி நியமனங்கள் செய்ய வேண்டாம் என, பல்கலைகள் மற்றும் கல்லுாரி கல்வி இயக்ககத்துக்கு, உயர்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.புதிய நியமனங்கள் நிறுத்தப்பட்டதால், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், உபரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களை, மற்ற பல்கலைகள், கல்லுாரிகளில் உள்ள காலி இடங்களுக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.