ராஜஸ்தானில் 1,000 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு: 88 பேர் மரணம்

ராஜஸ்தானில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் சுமார் ஆயிரம் பேர் வரை ஹெச்1என்1 வகைப் பன்றிக்காய்ச்சல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதன்காரணமாக இதே ஆண்டில் 88 பேர் மரணமடைந்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த ஆண்டில் ஜனவரி 1, 2017 முதல் டிசம்பர் 19, 2017 வரையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறிகளுடன் 11,721 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,124 பேருக்கு இந்நோயின் பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் கடந்த ஆண்டில் மட்டும் 241 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நடப்பு ஆண்டில் இதுவரை மட்டும் சுமார் 1,000 பேருக்கு இந்த நோயின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக 2017 டிசம்பரில் மட்டும் 400 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜனவரி 3-ஆம் தேதி சுகாதாரத்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து ஜனவரி 20-ந் தேதி பேசிய அம்மாநில சுகாதாரத்துறை செயலர் வி.கே.சிங் மத்தூர், பன்றிக்காய்ச்சல் நோய் பரவலை கட்டுப்படுத்தவும், தற்போதுள்ள நிலையை சமாளிக்கவும் சுகாதாரத்துறை முழு பலத்துடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.