புதிய பாடத்தி்ட்டம் கருத்துகேட்பு : டிச.,4வரை அவகாசம் நீட்டிப்பு

தினமலர்  நாளிதழ் செய்தியை தொடர்ந்து, புதிய பாடத்திட்டத்துக்கான கருத்து கேட்புக்கு, ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இதற்கான வரைவு பாடத்திட்டத்தை, முதல்வர் பழனிசாமி, நவ., 20ல் வெளியிட்டார். 



மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின், tnscert.org என்ற இணையதளத்தில், நவ., 21ல், பாடத்திட்ட வரைவு பதிவேற்றம் செய்யப்பட்டது.


இது குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள், ஒரு வாரம் வரை கருத்து கூறலாம் என, அறிவிக்கப்பட்டது. இந்த அவகாசம், நாளை முடியும் நிலையில், கருத்து கூறுவதற்கு அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த செய்தி, நமது நாளிதழில், நேற்று வெளியானது.
இது தொடர்பாக, அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின், பாடத்திட்டத்துக்கான கருத்து கூற, இன்று முதல், ஒரு வாரம் அவகாசம் நீட்டிக்கப்படும் என, அறிவித்தார். 


இதன்படி, டிச., 4 வரை, பாடத்திட்ட கருத்துக்களை பெற, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.