டிசம்பர் 4ம் தேதி புயல் சின்னம் உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: அந்தமான் அருகே இரண்டு நாளில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை டிசம்பர் 4ம் தேதி புயல் சின்னமாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய பிறகு 3 குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாகின. அதில் ஒன்று மட்டுமே தமிழகத்துக்கு மழை வாய்ப்பை அளித்தன. மற்ற இரண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலைகளும் தமிழகத்துக்கு மழையைக் கொடுக்க மறுத்து வேறு திசைகளில் பயணித்துவிட்டன.
ஆனால், வானிலை ஆய்வு மையம் தற்போது கூறியிருக்கும் மகிழ்ச்சியான தகவல் என்னவென்றால், வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி, டிசம்பர் 4ம் தேதி அளவில் புயல் சின்னமாக மாறும் என்பதே அது.
தென்மேற்கு வங்கக் கடலில் தற்போது அதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், தெற்கு அந்தமான் கடற்பரப்பில் இன்றும் இரண்டு நாட்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில பகுதிகளில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை புயல் சின்னமாக மாறும் என்று கணிக்கப்பட்டாலும், அது எந்த திசையில் பயணிக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தமிழகக் கடற்கரைக்கு அருகில் கரையைக் கடக்கலாம் அல்லது கடக்காமலும் போகலாம். ஆனால், ஆந்திரா கடற்கரை நோக்கி செல்ல வாய்ப்புகள் உள்ளன.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது முதல் இது நாள் வரை வழக்கமான அளவை விட 18 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த நாட்களில் 341 மி.மீ. மழை பெய்யும் நிலையில், இந்த ஆண்டு 278.3 மிமீ.

மழை மட்டுமே பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை 34% அதிக மழை பதிவாகியுள்ளது. அதாவது வழக்கமாக அக்டோபர் 1 முதல் நவம்பர் 27ம் தேதி வரை சென்னையில் வழக்கமான மழை அளவு 610.9 மி.மீ. மட்டுமே.

ஆனால் இந்த ஆண்டு 819 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் நவம்பர் 2ம் தேதி மட்டுமே சென்னையில் 300 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

ஆனால் அதற்குப் பிறகு சென்னையில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மழை பெய்யவில்லை. நவம்பர் 11ம் தேதி கன மழை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது கைகூடவில்லை.
தற்போது வரை நிலைமைகள் தமிழகத்துக்கு சாதகமாகவே உள்ளன. டிசம்பர் முதல் வாரத்தில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!