பள்ளிகளில் பதுங்கியிருக்கிறது 'ஏடிஸ்'... இங்குதான் உருவாகுது 'டெங்கு!' சுறுசுறுப்பு அடையுமா சுகாதாரத்துறை?

மக்கள் டெங்கு பாதிப்பினால், அரண்டு போய் கிடக்கின்றனர். அனைத்து மருத்துவமனைகளிலும் காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில் நிறுவனங்கள், வீடுகள், அரசு கட்டடங்கள் என சல்லடை போட்டு, டெங்கு பிறப்பிடத்தை தேடும் மாவட்ட சுகாதாரத்துறை, ஒரு முக்கியமானஇடத்தை சவுகரியமாக மறந்து விட்டது. அந்த இடம்...பள்ளிகள்!

போதிய பராமரிப்பின்மையாலும், அலட்சியத்தாலும் பள்ளிகளில் உருவாகும் 'ஏடிஸ்' கொசுக்கள், வகுப்பறைகளில் உள்ள மேஜை, இருக்கைகளை மறைவிடமாக கொண்டு, குழந்தைகளுக்கு நோயை பரப்பி வருகிறது. சுகாதாரத் துறை அதிகாரிகளின் தகவல் சேகரிப்பில், பள்ளியில் இருந்தே பெரும்பாலான குழந்தைகள் காய்ச்சலுடன் வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், 'டெங்கு' பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள், ரத்த பரிசோதனை மையங்களில் திரண்டு வருகின்றனர். மற்ற மாவட்டங்களை காட்டிலும், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள், கோவை மண்டலத்தில் அதிகமாக உள்ளது.கடந்த நான்கு மாதங்களில், வைரஸ் காய்ச்சலுக்கு, 15 ஆயிரம் பேரும், டெங்கு காய்ச்சலுக்கு, 7,500 பேரும், பன்றி காய்ச்சலுக்கு, 27 பேரும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த காய்ச்சல்களால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், சுற்றுப்புற சுகாதார சீர்கேட்டால், நோய் தாக்குதல் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. எனவே, டெங்குவை பரப்பும் 'ஏடிஸ்' கொசு உற்பத்தி சூழலை, உருவாக்குபவர்களுக்கு சுகாதாரத் துறை அபராதம் விதித்து வருகிறது.பெரும்பாலும், 14 வயதுக்கு குறைவான குழந்தைகளே, எளிதில் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 

அதிலும், பள்ளியில் இருந்து வீடு திரும்பும், குழந்தைகள் பலருக்கு காய்ச்சல் இருப்பது, சுகாதாரத் துறையினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. பல பள்ளிகளில் பயன்படுத்தாத பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை, வகுப்பறையின் ஓர் பகுதியிலோ, அல்லது பள்ளியின் வெளியே அமைந்துள்ள காலியிடங்களிலோ போட்டு வைக்கின்றனர். இருட்டான இந்த அறைகள், கொசுக்களின் இருப்பிடமாக மாறி விடுகிறது. 

பள்ளியின் வெளியே குவிக்கப்பட்டுள்ள பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களில், மழை நீர் தேங்கி, கொசு உற்பத்தியிடமாக மாறி விடுகிறது.மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகள், பெரும்பாலும் வெளிச்சமின்றி காணப்படுவதால், டெங்கு கொசுக்கள் மாணவர்களின் கை, கால்களில் கடித்து நோயை பரப்புகின்றன. பள்ளி நிர்வாகங்களின் போதிய பராமரிப்பின்மையும், அலட்சியமும் நோய் காரணிகளாக அமைகின்றன. கொசுக்கடி வாங்கும் குழந்தைகளுக்கு காய்ச்சல் தீவிரமடைகிறது.

இப்படி, நோய் தாக்குதல் பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கிறது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ள, உயர்கல்வி மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும், ஆசிரியர்களோ, நிர்வாகிகளோ கண்டுகொள்ளாமலே உள்ளனர்.

இது போன்ற கல்வி நிறுவனங்களால், குழந்தைகளின் உயிருக்கே ஆபத்தாக அமைகிறது. எனவே, வீடுகள், தொழிற்சாலை உள்ளிட்டவற்றில் ஆய்வு நடத்தும் சுகாதாரத் துறையினர் பள்ளி, கல்லுாரி போன்ற கல்வி நிறுவனங்களிலும் ஆய்வை தீவிரப்படுத்த வேண்டும். 

பள்ளிகளுக்கு உத்தரவிடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், டெங்கு கொசு உற்பத்திக்கு சாதகமான சூழல் உள்ள பள்ளிகளை அடையாளம் கண்டு, தலைமை ஆசிரியர்களுக்கு அபராதம் விதிக்கவும் கல்வி அதிகாரிகள் தயங்கக்கூடாது. அப்போதுதான் குழந்தைகள் உயிரிழப்பை கட்டுப்படுத்த முடியும்.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளின் வீடுகளில், ஆய்வு நடத்தி வருகிறோம். இதில், பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போதே, குழந்தைகள் காய்ச்சலுடன் வந்ததாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். 

தற்போது, வீடு, நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறோம். உயர் அதிகாரிகள் உத்தரவிட்டால், கல்வி நிறுவனங்களில் ஆய்வில் இறங்குவோம்' என்றனர்.இதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி கூறுகையில்,''பள்ளிகளில் பயன்படுத்தாத கழிவறைகள், மேற்கூரைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஆசிரியர்களிடம் வலியுறுத்துவதுடன், பள்ளிகளுக்கு 'மெயிலும்' அனுப்பி வருகிறோம். ஒவ்வொரு, புதன், வியாழக்கிழமைகளில் இப்பணிகள் நடந்து வருகிறது. ''வாரம் ஒருமுறை தலைமை ஆசிரியர்கள், இது குறித்து அறிக்கையும் அனுப்பி வருகின்றனர். தொடர்ச்சியாக பள்ளிகளில் ஆய்வும் நடத்தி வருகிறோம்,'' என்றார்.

இருண்ட பள்ளிகளில்வெளிச்சம் பரவட்டும்!டில்லி போன்ற வட மாநிலங்களில், மழை மற்றும் நோய் பரவும் காலங்களில் பள்ளி மாணவர்கள் முழுக்கை சட்டையும், ஸ்கர்ட், டிரவுசர் அணிபவர்கள், பேன்ட்டும் அணிந்து கொள்வர். இதனால், கொசுக்கடி பாதிப்பு தடுக்கப்படுகிறது. 

இதுபோன்ற பாதுகாப்பு முறைகளை, தமிழகத்திலும் கொண்டு வந்தால், குழந்தைகள் மரணத்தை கட்டுப்படுத்தலாம். பெற்றோர் இதில் கவனமாக செயல்பட வேண்டும். இதே போல், அனைத்து வகுப்பறைகளிலும் மின் இணைப்பு ஏற்படுத்தி, விளக்குகள் அமைத்தும், கொசுக்கள் கூடாரமிடுவதை தடுக்கலாம்.